ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை அண்ணாமலை நிறுத்த வேண்டும் - செல்வப்பெருந்தகை!
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை அண்ணாமலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "கல்வி நிலையங்களில் சாதி, மத, உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டு வன்முறை வெறியாட்டத்தின் காரணமாக கடுமையான மோதல்கள் கடந்த காலங்களில் ஏற்பட்டதை அனைவரும் அறிவார்கள்.
இளமை பருவத்தில் கல்வி பயில வருகிற மாணவர்களுக்கு மானுட அறத்தையும், அறிவையும் வளர்க்கிற வகையில் பாட திட்டங்களில் சமூக, சமத்துவம் சார்ந்த கருத்துகள் இடம் பெறுகிற வகையிலும், அறநெறி வகுப்புகள் வாரந்தோறும் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பொது சமூக உணர்வோடு போதிக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள் சாதி அடையாளங்கள் மூலம் மாணவர்களிடையே வேற்றுமையை வளர்க்கக் கூடாது என பரிந்துரைகள் வழங்கப்பட்டது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
அத்தகைய அடையாளங்கள் கல்வி அறிவை வளர்ப்பதற்கு எந்த வகையிலும் உதவிடாது என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட நீதிபதி சந்துரு வழங்கிய அறிக்கை குறித்து விவாதிப்பதில் தவறில்லை.
[
ஆனால், அறிக்கை வழங்கிய நீதிபதி சந்துருவுக்கு உள்நோக்கம் கற்பிப்பித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை அண்ணாமலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். சந்துரு அவர்கள் நீதியரசராக இருந்து வழங்கிய தீர்ப்புகளின் கருத்துகளின் அடிப்படையில் அவர் எழுதி வெளியிட்ட ‘அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” என்ற புத்தகத்தை தபால் மூலமாக அனுப்புகிறேன்.
அந்நூலை அண்ணாமலை படித்து நீதிபதி சந்துரு அவர்களை பற்றி முழுமையாக புரிந்து கொண்டு கருத்துகளை கூற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.