அதிகாரிகளை மாற்றுவதால் சட்டம்-ஒழுங்கு சீராகிவிடாது - ஈபிஎஸ் ஆவேசம்!
அதிகாரிகளை மாற்றுவதால் சட்டம்-ஒழுங்கு சீராகிவிடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் நிர்வாக திறனற்ற ஆட்சி நடக்கிறது.
தமிழகத்தில் பொதுமக்கள், பெண்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் கொலைகள் நடக்காத நாட்களே இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தபின் காவல்துறை அதிகாரிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடையாது.
போலி குற்றவாளிகள்
அதிகாரிகளை மாற்றுவதால் சட்டம்-ஒழுங்கு சீராகிவிடாது. திட்டமிட்டுதான் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையானவர்கள் அல்ல.
அவர்கள் போலி குற்றவாளிகள். எந்தெந்த துறையில் கொள்ளையடிக்கலாம் என்பதுதான் இந்த ஆட்சியின் திட்டம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம். எனவே அவரை பற்றி பேச ஒன்றுமில்லை" என்று தெரிவித்துள்ளார்.