விஜய்யின் அரசியல் வருகை இந்தியா கூட்டணி வெற்றி பெற உதவும் - செல்வப்பெருந்தகை
நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்டால் திமுக அளித்திருக்கும் என செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.
செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "விஜய்யின் அரசியல் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. யார் சலனத்தோடு இருக்கிறார்களோ அவர்களுக்கு சலசலப்பை ஏற்படுத்தலாம்" என பேசினார்.
விஜய்யின் அரசியல் வருகை
மேலும், "தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. விஜய்யின் அரசியல் வருகை இந்தியா கூட்டணி வெற்றி பெறவே உதவும். விஜய்க்கு மட்டுமா கூட்டம் கூடியது? ராகுல் காந்தி வந்தபோது இதை விட அதிக கூட்டம் கூடியது.
விஜய்யின் கூட்டணி பகிர்வு குறித்த கருத்தை வரவேற்கிறோம். கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமைதான் முடிவெடுப்பார்கள். 2004 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட்டது.
காமராஜர் ஆட்சி
2006 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அன்றைக்கு கருணாநிதி தமிழக முதல்வராக இருக்க வேண்டும் என நிபந்தனை இன்றி ஆதரவு கொடுத்தார் சோனியா காந்தி. ஒருவேளை அன்றைக்கு எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்டிருந்தால் திமுக கொடுத்திருக்கும்.
தமிழகத்தில் தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும். தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி உருவாக்க வேண்டும் என்பதை நோக்கிதான் எங்கள் பயணம் இருக்கும்.
தமிழ்நாட்டில் அடுத்து கூட்டணி ஆட்சியா என்பதை முடிவு செய்வது மக்கள் கையில் தான் உள்ளது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கூற்று தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. தற்போது நாங்கள் எங்கள் கட்சியை வலுப்படுத்த வேலை செய்து வருகிறோம்" என பேசினார்.