ஆம்ஸ்ட்ராங் கொலை; செல்வப்பெருந்தகைக்கு தொடர்பா? ராகுலுக்கு பறந்த கடிதம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகச் செயல்பட்டு வந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் பெரம்பூரில் வீட்டருகே படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதில் பல ரவுடிகள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியானது. இதில் பலரும் கைது செய்யப்பட்டு காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
செல்வப்பெருந்தகை
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்,செல்வப்பெருந்தகைக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பதாகவும், ஆளும் கட்சியினுடைய கூட்டணி கட்சியின் மாநில தலைவர் என்பதால் இவரை விசாரிக்க காவல்துறை தயக்கம் காட்டுகிறது. எனவே இவரை கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி எழுதிய இந்த கடிதம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வப்பெருந்தகை 2008 முதல் 2010 வரை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்தார். இதுமட்டுமல்லாமல், புரட்சி பாரதம், புதிய தமிழகம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளிலும் பயணித்துள்ளார்.