"இன்னும் எத்தனை காலம் தான்.." காங்கிரஸ் தனித்து போட்டியா? - செல்வப்பெருந்தகை பரபரப்பு பேச்சு
தமிழகத்தில் இன்னும் எத்தனை காலம் தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியிருக்கிறார்.
காங்கிரஸ் பொதுக்குழு
தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இன்று (ஜூன் 11) காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செல்வப்பெருந்தகை
கூட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழகத்தில் தோழமை கட்சிகளை சார்ந்துதான் அரசியல் செய்யப்போகிறோமா? அல்லது சுயமாக இருக்கப்போகிறோமா என்பதை கூறுங்கள் என கட்சியினரிடம் கருத்து கேட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் இன்னும் எத்தனைக் காலம் தான் தோழமை கட்சிகளை சாந்திருப்பது என கட்சியினரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தோழமைக் கட்சிகளுடன் கூட்டணியில் உள்ள போதும் காங்கிரஸ் கட்சிக்கு என்று தனி வரலாறு உள்ளது, தோழமை என்பது வேறு எனவும் கூறியுள்ளார். ஈ
விகேஎஸ் இளங்கோவன்
இவருக்கு பின் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், "தமிழகத்தில் இன்று 40-க்கு 40 வென்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் திமுக.. ஆசை இருக்கலாம் ஆனால் பேராசை இருக்கக் கூடாது" என செல்வப்பெருந்தகை பேச்சுக்கு அதே மேடையிலே பதில் கொடுத்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து கொண்டே காங்கிரஸ் தலைவர் இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.