பட்டாசு ஆலை விபத்துகள்: தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை!
பட்டாசு ஆலை வெடி விபத்துகள் இனி நிகழாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது.
பட்டாசு தொழிற்சாலைகளில் தொடர்ந்து வெடிவிபத்துகள் ஏற்படுவதும், தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாக நடந்து வருகின்றன. இத்தகைய விபத்துகளுக்கு யார் காரணம் ? யார் பொறுப்பு என்பதை அறிய முடியாமலேயே விபத்துகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்துகளை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அரசுத்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.
வலியுறுத்தல்
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார்.
பட்டாசு ஆலை வெடி விபத்துகள் இனி நிகழாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.