அதிமுகவால் நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன் - தொழிலதிபர் புகார்!! காவல் நிலையத்தில் செல்லூர் ராஜு!!
கடந்த அதிமுக ஆட்சியால் சென்னையில் தனது மென்பொருள் நிறுவனத்தை மூடி தற்போது பெரும் இன்னல்களை சந்தித்து வருவதாக தொழிலதிபர் ஒருவர் குற்றம்சாட்டி வருகிறார்.
நெல்லை தொழிலதிபர் புகார்
சென்னையில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வந்தவர் நெல்லையை சேர்ந்த தொழிலதிபர் நவமணி. கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடான டெண்டர் காரணமாக தனது தொழில் நிறுவனத்தை மூடி விட்டதாக அவர் குறிப்பிட்டு, அதன் காரணம் அதிமுக தான் என குற்றம்சாட்டினார்.
இவர் வீடின்றி சாலையில் வசித்து வரும் படங்கள் பெரும் வைரலான நிலையில், இந்த சம்பவங்களின் தொடர்பாக பலரும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக அதிமுக ஆட்சியில் பணியாற்றிய செல்லூர் ராஜு மீது பெரும் விமர்சனங்கள் ஏழ துவங்கி இருக்கின்றன.
புகார் அளித்த செல்லூர் ராஜு
அதனை தொடர்ந்து தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரை அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இது முழுக்க தனது உரிமையை பாதித்த விஷயமாகும் என குறிப்பிட்டு, சட்டமன்றம் கூடும் முதல் நாளே இந்த சமபவங்கள் மக்களின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும் குறை கூறினார்.
தன் மீது தேவையற்ற அவதூறுகளை பரப்பி, பொதுவாழ்க்கைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்த நிலையில், இது குறித்து புகார் அளித்துள்ளதாகவும், இது குறித்து தொழிலதிபர் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.