இசைவாணி விவகாரத்தை சும்மா விட மாட்டோம்; கொதித்த பாஜக - சேகர்பாபு பதில்!
இசைவாணி மீது தமிழகம் முழுவதும் பாஜக புகார் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசைவாணி விவகாரம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது தொடர்பாக பாடகி இசைவானி பாடிய பாடல் ஒன்று சர்ச்சையாக வெடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் குறித்து அவதூறாக பாடல் பாடிய இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் புகார் அளிக்கப்படுகிறது. இந்தப் புகார் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.
பல்வேறு இயக்கங்கள் வைத்தும் சில நபர்களை வைத்தும் இந்து மதத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வரும், துணை முதல்வரும் செயல்பட்டு வருகின்றனர். இந்து மதத்தை கொச்சைப்படுத்துவதை பாஜக வழக்கறிஞர் பிரிவும் சும்மா விடாது என பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் வணங்காமுடி தெரிவித்திருந்தார்.
சேகர்பாபு பதில்
இந்நிலையில் இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் கேள்வி கேட்கையில், “எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதை நிச்சயமாக முதல்வர் அனுமதிக்க மாட்டார். கானா பாடகி இசைவாணி பாடியுள்ள, ஐயப்ப சுவாமி பற்றிய சர்ச்சை பாடல் குறித்து, புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, தவறு இருந்தால் உரிய நடவடிக்கையை எடுக்கப்படும். மதத்தால், இனத்தால், மக்களை பிளவுபடுத்துகிற சக்திகள், இந்த ஆட்சியில் தலைதுாக்க முடியாது.” என பதிலளித்துள்ளார்.