கலைஞர் சிலையை உடைத்தால் கை என்ன ஆகும் தெரியுமா? - சீமானுக்கு சேகர் பாபு எச்சரிக்கை
சமத்துவம் பேசுவதால் நாங்கள் கோழைகள் என்று நினைக்க வேண்டாம் என அமைச்சர் சேகர் பாபு பேசியுள்ளார்.
சீமான் பேச்சு
தமிழ்நாட்டில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், கலைஞர் மகளிர் உரிமை தொகை என திமுக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட காட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 'ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் கருணாநிதி சிலை, பேனா சிலையை உடைப்போம்' என கூறினார்.
சேகர்பாபு பதிலடி
இந்நிலையில் சீமான் கூறியது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, "கலைஞர் சிலையை சீமான் எந்த வகையில் உடைக்கிறேன் என்று சொன்னார் எனத் தெரிந்தால் அதே வகையில் அவருக்கு பதில் தரப்படும்" என கூறினார்.
மேலும், "தமிழகத்தில் கலைஞரால் 'உடன் பிறப்பு' என்ற வார்த்தையில் தூக்கி நிறுத்திய கரங்கள் ஒரு கோடிக்கு மேல் இருக்கிறது. ஒரு சில லட்சங்களை கொண்ட உங்களுடைய கரங்களே இதுபோன்று சிலைகளை உடைக்க முற்படுமானால் உடைக்கின்ற கரங்களை ஒரு கோடிக்கு மேலாக உள்ள உடன்பிறப்பு கரங்கள் எப்படி பதம் பார்க்கும் என்பதை உங்களுடைய கேள்விக்கே விட்டு விடுகிறேன்.
நாங்கள் சமத்துவம், சமாதானம் பேசுவதால் கோழைகள் என்று நினைக்க வேண்டாம். எங்களுக்கும் வீரம் இருக்கிறது. சீமான் வாய் சொல்லில் வீரர் என்பது தெரியும். சீண்டல் என்பது வார்த்தையில் இருக்க கூடாது பல பிரயோகம் இருக்க வேண்டும். தேர்தல் களங்களில் அவருடைய செல்வாக்கை நிரூபிக்க வேண்டும். இவைகளை தவிர்த்து வாய்க்கு வந்ததை பேசி விட்டுப் போவதில் எந்தவிதமான பலனும் இல்லை" என கூறினார்.