ஸ்டாலின் வீட்டிற்கு ரெய்டு வராததன் காரணம் இதுதான் - சீமான் விளக்கம்
பாஜக திமுக இடையே வெளிப்படையான கூட்டணி என சீமான் பேசியுள்ளார்.
சீமான்
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரின் திருஉருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், "ஆட்சியாளர் தன்னுடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று கூறினால், அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். ஆட்சியைப் பற்றி மக்கள் சொல்ல வேண்டும்.
மு.க.ஸ்டாலின்
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களான ஜார்கண்ட்டில் ஹேமந்த் சோரன், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானாவில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. ஆனால், தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினின் வீட்டுக்கு மட்டும் ரெய்டு வரவில்லை.
அப்படியென்றால், கறைபடியாத, தூய்மையான கையா இது? அவர்களுக்குள் ஒரு உடன்பாடு இருக்கு. சரியாக கப்பம் கட்டி வருவதால், முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு எல்லாம் ரெய்டு வராது. இது மறைமுக உறவு கிடையாது. நல்ல உறவில் வெளிப்படையான கூட்டணி உள்ளது.
தனித்து போட்டி
பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்தும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை. ஆனால் திமுக கூட்டணியில் இல்லாத போதும், கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்று அமைச்சர் ராஜ்நாத் சிங், அதனை வெளியிடுகிறார். இதன் மூலம், பாஜகவுடன் யார் நெருக்கமான கூட்டணியை வைத்துள்ளார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் யாருடனும் கூட்டணி கிடையாது. கூட்டணி என்பது தற்கொலைக்குச் சமம் என்ற கோட்பாட்டைக் கொண்டவன் நான். 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம். அதில் 117 பெண்கள், 117 ஆண்ளுக்கு வாய்ப்புக் கொடுப்போம். நூறு இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வாய்ப்புக் கொடுக்க இருக்கிறோம்" என பேசினார்.