பதவியை ராஜினாமா செய்து - MP தேர்தலில் வெற்றி பெற்று காட்டுங்கள்..சேகர் பாபு சவால்..!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று காட்டுங்கள் என பாஜகவின் எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசனுக்கு சேகர் பாபு சவால் விட்டுள்ளார்.
சேகர் பாபு சவால்
சென்னை வால் டாக்ஸ் சாலையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒப்பனை அறையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் எம்.பி. தயாநிதி மாறன், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசும் போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனது சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை வானதி சீனிவாசன் துறந்து சென்னையில் இருக்கும் 3 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் நின்று முடிந்தால் வெற்றி பெற்று காட்டட்டும் என சவால் விடுத்துள்ளார்.
இன்னும் திருமணமே முடியாமல் குழந்தைக்கு பெயர் வைப்பதா? என்பது போல, கோயம்பேடு பேருந்து நிலைய இடத்தை எந்த பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்ற முடிவை கூட எடுக்காத நிலையில், கோயம்பேடு பேருந்து நிலைய இடத்தை தனியாருக்கு வழங்கவுள்ளதாக அன்புமணி கூறுவது விசித்திரமாக உள்ளது என்றும் விமர்சித்தார்.
அன்புமணியின் நகைச்சுவை
அன்புமணி ராமதாஸின் கருத்துதான் இந்த ஆண்டில் தலைசிறந்த நகைச்சுவையாக இருக்கும் என்று சாடி, 60 வயதை எட்டியவர்களை முருகனின் அறுபடை வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் புதிய திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த திட்டத்தின் மூலம், 207 பேர் முருகனின் அறுபடை வீடுகளுக்கு செல்கின்றனர் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் சேகர் பாபு, அங்கு தனிநபராக செல்ல ரூ.50,000 வரை செலவாகும் ஆனால், அதில் ஒரு நபருக்கு ரூ.15,830 அரசு செலவு செய்கிறது என்று தெரிவித்தார்.