குற்றம் சொல்லணும் - அதுக்காகவே மாநில தலைவராக இருக்கிறார் - சேகர் பாபு
இந்துக்களையும் இந்து திருக்கோயில்களையும் வைத்து அரசியல் செய்யலாம் என்பவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சி இருக்கிறது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
நகைகளின் வட்டி
சென்னையில் அரசின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் சந்தித்த தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசும் போது, கோயிலில் பயன்பாட்டில் இல்லாத நகைகள் உருக்குதல் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் செயலிழந்து இருந்தது என்று கூறி, நகைகளின் வட்டி மூலம் வரும் வருவாய் கோயில்களின் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றார்.
மலை ரோப் கார் அமைக்கும்போது அதில் மக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தான் செயல்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டி, சோழிங்கநல்லூர் ரோப் கார் வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.
குறைக்கூறுவதற்காகவே..
தொடர்ந்து பேசிய அவர், தமிழக ஆன்மீக பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தக் கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டு வருவதாக சுட்டிக்காட்டி, குற்றம் கூறுவதற்காகவே கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை செயல்படுகிறார் என்று விமர்சனம் செய்தார்.
மேலும், ஆன்மீகப் பணிகளில் முதலிடம் தர வேண்டும் என்றால் இந்தியாவிலேயே திராவிட மாடல் ஆட்சியில் என்று உறுதிபட தெரிவித்த அவர், திமுக ஆட்சியில் தான் கோவில்களின் 5084 கோடிக்கு சொத்துக்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறி, இந்துக்களையும் இந்து திருக்கோயில்களையும் வைத்து அரசியல் செய்யலாம் என்பவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சி இருக்கிறது என்றார்.