திமுகவை அசைத்து பார்க்க இன்னொருவர் பிறந்து வர வேண்டும் - அமைச்சர் சேகர் பாபு பதிலடி
அண்ணாமலையால் அறிவாலயத்தை தொட்டு கூட பார்க்க முடியாது என அமைச்சர் சேகர் பாபு பேசியுள்ளார்.
அண்ணாமலை பேச்சு
சென்னையில், தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இதில் பேசிய அவர், "பா.ஜ.க தலைவராக முடியாது என எனக்கு தெரியும். ஆனால், நான் இங்கு இருந்து செலும்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விடமாட்டேன், 2026 ல் 35 அமைச்சர்கள் சிறை செல்வதை பார்ப்பேன்" என கூறினார்.
சேகர் பாபு
இந்நிலையில் அண்ணாமலையின் இந்த பேச்சு குறித்து செய்தியாளர்களை அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பிய போது, தமிழ்நாட்டிலே பிறந்து தமிழக அரசியலை கரைத்து குடித்தவர்கள் திமுகவினர். அண்ணாமலை போல் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல.
திமுகவின் ஆலயமாக கருதப்படும் அண்ணா அறிவாலயத்தை தொட்டு கூட பார்க்க முடியாது. அப்புறம் எப்படி செங்கலை பிடுங்க முடியும்? திமுகவை அழிக்க நினைத்தவர்கள் மண்ணோடு மண்ணாக போனதுதான் வரலாறு. 75 ஆண்டுகள் கடந்த திமுகவை அசைத்துப்பார்ப்பதற்கு இன்னொருவர் பிறந்து வர வேண்டும்.
இவரின் ஆணவ பேச்சுக்கு 2026 தேர்தலில் மிருக பலத்துடன் திமுகவை ஆட்சியில் அமரவைப்பார்கள். அண்ணாமலை தமிழ்நாட்டில் எங்கு போட்டியிட்டாலும், கடைக்கோடி திமுக தொண்டனை நிறுத்தி அவரை முதல்வர் மண்ணை கவ்வ வைப்பார்" என பேசினார்.