தென்காசி பிரபல பார்டர் பரோட்டா கடை - 200கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

Tamil nadu
By Sumathi Feb 10, 2023 06:26 AM GMT
Report

பிரபல பரோட்டா கடையில் 200 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பரோட்டா கடை

தென்காசி, பிரானூர் பார்டர் பகுதியில், ரஹமத் புரோட்டா ஸ்டால் என்ற உணவகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்துவிட்டு அடுத்தபடியாக உணவு சாப்பிட சென்றால் அந்த கடையாகத்தான் இருக்கும்.

தென்காசி பிரபல பார்டர் பரோட்டா கடை - 200கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் | Seized Tenkasi Parotta Shop Meat

இந்நிலையில், அங்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக வாட்ஸ்அப் புகார் எண் மூலம் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ரஹ்மத் புரோட்டா கடையை சோதனையிட சென்றனர்.

கெட்டுப்போன இறைச்சி

அப்போது அங்கிருந்த உணவக ஊழியர்கள் கடைக்கு சொந்தமான பொருட்கள் சேமித்து வைத்திருந்த குடோன் மற்றும் விற்பனைக்கு தயாராகி இருந்த பிரியாணியையும் மூடி வைத்து கடையையும் பூட்டிவிட்டுச் சென்றனர். இதனால் குடோனுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சீல் வைத்தனர்.

தொடர்ந்து மாலையில் சீலை அகற்றி குடோனை சோதனையிட்டபோது, அங்கு 200 கிலோ அளவுக்கு கெட்டுப்போன இறைச்சி இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவற்றை அழிக்க உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இதுகுறித்து கடை முதலாளியிடம் கேட்டபோது எங்கள் கடையில் தரமான பொருட்கள் கொண்டு மூன்று தலைமுறைக்கு மேலாக தொழில் செய்து வருவதாகவும் தெரிவித்தவர்கள் கடையில் சாப்பிட வரும் வாடிக்கையாளரிடம் கேளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.