சில்லி காலிஃப்ளவரில் இருந்த ரத்த பேண்டேஜ் - வாயில் இருந்து எடுத்த சிறுமி அதிர்ச்சி
சென்னையில் உணவு சீர்கேடு தொடர்பாக இரண்டு அதிர்ச்சி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சென்னை திருநின்றவூரில் காலிஃப்ளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் பேண்டேஜ் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதே போன்றும், கொரட்டூரில் உள்ள கடை ஒன்றில் பரோட்டா சாப்பிட்ட இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
சென்னை திருநின்றவூரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் ஷைலாபானு என்பவர் காலிஃப்ளவர் பக்கோடா வாங்கியுள்ளார். அதனை தனது மகளுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது மகளின் வாயில் ஏதோ ஒன்று சிக்க, எடுத்துப்பார்க்கையில் ரத்தத்துடன் பேண்டேஜ் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஷைலாபானு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இந்த புகாரையடுத்து அந்த சூப்பர் மார்க்கெட்டில் ஆய்வாளர் வேலவன் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாததால் அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை கொரட்டூரில் இரவுக்கடை ஒன்றில் பரோட்டா சாப்பிட்டுவந்து உறங்கிய கல்லூரி மாணவர் சிபி, மூச்சுத்திணறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கல்லூரி மாணவர் சிபியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.