ஆபாச பேச்சு.. மனசுக்கு கஷ்டமா இருக்கு, அவர் காமெடியா சொல்லிருப்பார் - சீமான் ஆதரவு!
நடிகர் மன்சூர் குறித்து சீமான் பேசியுள்ளார்.
ஆபாச பேச்சு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகர் த்ரிஷா. இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார், படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில், விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மடோனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசினார்.

இதற்கு நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில், "மன்சூர் அலிகான் எல்லாம் மனித குலத்துக்கே இழுக்கு" என்று காட்டமாக பதிலளித்தார். மேலும், அவர் பேசியதற்கு பல நடிகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சீமான்
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சீமான், "அண்ணன் மன்சூர் அலிகானை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் வேண்டுமென்று பேசியிருப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை. விளையாட்டாக, நகைச்சுவைக்கு சொல்லியிருக்கலாம். ஆனால் பலபேரின் மனம் காயப்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு போய்விடலாம்.

என் கட்சியில் வேட்பாளராக நின்று போட்டியிட்டவர் அவர். இன உணர்வு மிக்க ஒரு தமிழன். அவரை எல்லாரும் சேர்ந்துகொண்டு இப்படி செய்யும்போது மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதில் என்னால் கருத்து சொல்ல இயலாது. அவர் என்ன பேசினார் என்றே நான் கேட்கவில்லை. எனக்கு தெரிந்து அவர் யார் மனதையும் காயப்படுத்தும்படி பேசமாட்டார்.
இயற்கையிலேயே வேடிக்கையாக பேசும் மனிதர் அவர். அதனால் அந்த மாதிரி பேசியிருப்பார். இதனை இவ்வளவு பெரியதாக எடுத்துப் பேச வேண்டுமா என்றுதான் எனக்குத் தோன்றுகிறது" என்று கூறியுள்ளார்.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    