வீதியில் இறங்கிய ஓலா; வேடிக்கை பார்க்கும் திமுக - கொந்தளித்த சீமான்!
தமிழக அரசின் மெத்தனப்போக்குக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் போராட்டம்
ஓலா, ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத் தொகை போதுமானதாக இல்லை என்றும், நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும் ஓட்டுநர்களும் கார் உரிமையாளர்களும் புகார்களை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசு, கார் மற்றும் ஆட்டோ சேவையில் தனியார் பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், வாடகை வாகன ஓட்டுநர்களுக்கான கட்டணத்தை முறைப்படுத்தி அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்.
சீமான் கண்டனம்
வாடகை வாகன சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பெருநிறுவனங்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கட்டாயம் சேவை மையம் தொடங்க உத்தரவிட வேண்டும். பயணிகளுக்கு வழங்கப்படுவதுபோல வாகன ஓட்டுநர்களுக்கும் நிறுவனமே விபத்துக் காப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு தனியாக நல வாரியம் அமைப்பதோடு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் தனி சேவை மையம் அமைக்க வேண்டும். நீண்டதூர வெளியூர் பயணம் செல்லும் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு அனைத்து நகரங்களிலும் குறைந்த செலவில் குளியலறை மற்றும் ஒப்பனை அறையை தமிழக அரசு அமைத்து தர வேண்டும்.
கேரள மாநில அரசு செய்துள்ளதுபோல அரசு சார்பில் குறைந்த பிடித்த தொகையில் ‘வாகன சேவைக்கான முன்பதிவு செயலியை’ உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வாடகை வாகன சேவை புரியும் ஓட்டுநர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.