நாங்கள் என்னதான் பேசுவது? - மாரிதாஸ் கைதுக்கு சீமான், அண்ணாமலை கடும் கண்டனம்

bjp NTK annamalai youtubermaridoss seemaan
By Petchi Avudaiappan Dec 09, 2021 11:53 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழகத்தை காஷ்மீருடன் இணைத்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக பாஜக ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு சீமான், அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

முப்படைகளின் தலைமை தளபதியின் ஹெலிகாப்டர் விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில்  மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் "திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா. தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்" என்ற வார்த்தைகளுடன் பதிவிட்டு இருந்தார். 

அந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர் அதை தனது பக்கத்தில் இருந்து நீக்கினார். இந்நிலையில், மதுரை புதூர் காவல்நிலைய போலீசார், 153 A, 505 ஆகிய பிரிவுகளில் சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்தல், அரசு உயர் அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் பதிவிடுதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளனர். சீமான் அளித்த பேட்டியில் தம்பி மாரிதாஸின் கைதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். ஒரு ஜனநாயக நாட்டில் எதையுமே பேசக்கூடாது என்று மாரிதாஸ் சார்ந்திருக்கும் பாஜக சொல்வதையும் ஏற்க முடியாது.

திமுக எடுக்கும் முடிவையும் ஆதரிக்க முடியாது. கருத்து சுதந்திரத்திற்கு எதிராக கைது செய்தால் நாங்கள் என்னதான் பேசுவது? அதேபோல, தம்பி சாட்டை துரைமுருகனையும் வேண்டுமென்றே கைது செய்தார்கள். என்னிடம் ’உங்கக் கூடவே இருக்கார். எங்களுக்கு நெருக்கடி’ என்றார்கள் காவல்துறையினர். ’நானே அனுப்புகிறேன்’ என்று சரணடைய வைத்தேன்.

ஆனால், இந்த அரசு எவ்வளவு வன்மமாக இருக்கிறது என்பது அவனை நான் பிணையில் எடுக்க போராடும்போதுதான் தெரிந்தது. மாரிதாஸுக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார். 

இதேபோல் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ''மதுரையில் மாரிதாஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டறிந்து, அவரிடம் தொலைபேசி மூலமும் உரையாடினேன்! ஜனநாயகம் அளித்த கருத்துரிமையைப் பொருட்படுத்தாமல் பாரபட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். தி.மு.க-வை விமர்சித்தால் மட்டும் கைது? இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை. ஒருபக்கம் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய ஏவல் படையை தயார் செய்தும், இன்னொருபக்கம் தேசியவாதிகளை அறிவாலயம் அரசு கைது செய்கிறது! இந்த கபட நாடகத்தை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது!'' என கூறியுள்ளார்.