தம்பி வேறு கொள்கை வேறு; விஷமும் மருந்தும் எப்படி ஒன்றாகும்? விஜய்யை சரமாரியாக விமர்சித்த சீமான்
தம்பி என்ற உறவு வேறு. கொள்கை என்று வந்துவிட்டால் பகைதான் என சீமான் பேசியுள்ளார்.
விஜய்
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், திராவிடமும் தமிழ் தேசியமும் தனது இரு கண்கள் என பேசினார்.
இந்நிலையில், சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
சீமான்
இதில் பேசிய அவர் “பாலகன் பாலச்சந்திரன் நெஞ்சில் 5 குண்டுகளைத் தாங்கி மரணித்துக் கிடந்தபோது, பதறித்துடித்தது தமிழ்த்தேசியம். அதேநேரம், சிறிதும் பதற்றம் இல்லாமல், பதவியேற்றது திராவிடம்.
திராவிடம் பெண்ணிய உரிமையைப் பேசும். ஆனால் தமிழ்த்தேசியம், பெண்ணிய உரிமையைக் கொடுக்கும், நிறைவேற்றும். ஆணும் பெண்ணும் சமம் என்பதுதான் தமிழ்த்தேசியக் கோட்பாடு. பெண் விடுதலை இல்லையே, மண் விடுதலை இல்லை. பெண்ணியம் உரிமை பேசும் திமுக அதை கொடுத்திருக்கிறதா? தமிழக அமைச்சரவையில் சரிபாதி விழுக்காடு பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதா?
மதுகடைகளை மூடச் சொல்வது தமிழ்த்தேசியம். தெருவுக்கு இரண்டு மதுகடைகளைத் திறப்பது திராவிடம். இரண்டும் ஒன்று என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? திராவிடம் என்ற விஷமும் தமிழ்த்தேசியம் என்ற மருந்தும் எப்படி ஒன்றாகும். திராவிடத்தை வளர்க்க கட்சி என்றால் இங்குதான் திராவிடம் வலிமையாக இருக்க கட்சிகள் இருக்கிறதே. அடுத்த தலைமுறைக்கும், அதற்கடுத்த தலைமுறைக்கும் திராவிடத்திற்கு தலைவர்கள் தயாராக உள்ளனரே.
மொழியும் இனமுமே அடையாளம்
கூட்டம் எல்லாருக்கும் வரும். திரைப்பட நடிகனைப் பார்க்க வரும் ரசிகன் வேறு, கொள்கைக்காரன் வேறு. இரண்டையும் ஒப்பிடுவது தவறு.சேலத்தில் விவசாயிகள் போராட்டத்துக்கு 40 பேர் வந்தார்கள். கடை திறக்க வந்த நயன்தாராவை பார்க்க 4 லட்சம் பேர் வந்தார்கள். எனக்கு 36 லட்சம் பேர் வாக்களித்துள்ளார்கள்? இப்போ எது பெரிய கூட்டம். இன்னொரு நடிகர் அழைத்தாலும் கூட்டம் வரும். விஜயகாந்துக்கு மதுரையில் கூடாத கூட்டம் இப்போது கூடிவிட்டதா?
சாதி, மதம், இனம், மொழி என்று பிரிக்கிறார்கள் என்று விஜய் பேசுகிறார். சாதி மதத்தோடு இனதையும் மொழியும் ஒப்பிடுவது சரியா? எந்த நாட்டுக்கு போனாலும் நீ யார் கேட்டால் நான் இந்து, நான் முஸ்லீம், நான் கிறிஸ்டியன், நான் இந்த சாதி என்று சொல்ல முடியாது. மதமும் சாதியும் நமது அடையாளம் அல்ல மொழியும் இனமும்தான் நமது அடையாளம்.
திராவிடம் என்றால் என்ன
அதேபோல், இருமொழிக் கொள்கை என்கிறார். அடுத்தவர்கள் மொழி எப்படி எனக்கு கொள்கை மொழியாக இருக்க முடியும்? ஆயிரக்கணக்கான பேரை அம்மா என்று அழைக்கலாம். ஆனால், பெற்றவள் ஒருத்திதான். அதனால் எனக்கு கொள்கை மொழி என்னுடைய தாய்மொழி. தெலுங்கு, கன்னடா என அவரவருக்கு அவர்களுடைய தாய்மொழிதான் கொள்கை மொழியாக இருக்க முடியும்.
தமிழ் பயிற்றுமொழி. ஆங்கிலம் கட்டாயப் பாடமொழி. உலகின் அனைத்து மொழிகளும் எங்களுடைய விருப்ப மொழி. விரும்பினால் கற்போம். மும்மொழிக் கொள்கை என்பது மோசடி கொள்கை. இருமொழிக் கொள்கை என்பது ஏமாற்றுக் கொள்கை. தமிழே எங்கள் மொழி என்பது தமிழ்த் தேசிய கொள்கை.
திராவிடம் என்றால் என்ன? தமிழ்த்தேசியம் என்றால் என்ன? விஜய் கட்சியை சேர்ந்த யார் இதற்கு விளக்கம் அளிப்பார்கள்? இலங்கையில் லட்சக்கணக்கான இன மக்கள் கொல்லப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன?
காங்கிரஸ் அதிமுக
ஆந்திர காட்டில் வைத்து 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விஜய்யின் கருத்து என்ன? பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு, EWS-க்கு 10 விழுக்காடு இதை ஏற்கிறீர்களா? எதிர்கிறீர்களா? அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள் இடஒதுக்கீடு, இதை ஏற்கிறீர்களா? எதிர்கிறீர்களா?
பாஜக மதவாதம் என்றால் காங்கிரஸ் மிதவாதமா? நீட் போன்ற நாசகார திட்டங்களை கொண்டுவந்தது காங்கிரஸ்தான். பாஜக சத்தமாக இந்துத்துவா பேசும், காங்கிரஸ் சத்தமின்றி இந்துத்துவா பேசும். அதிமுக தலைவி ஊழல் செய்யவில்லையா? காங்கிரஸ், அதிமுக உங்கள் எதிரி இல்லையா? ஒன்று கொள்கையை மாத்தணும் இல்லை எழுதி கொடுத்தவரை மாற்ற வேண்டும். இரண்டையும் வைத்துக் கொண்டு குழப்பிக்கொள்ளக்கூடாது.
திருமாவளவன்
தம்பி என்ற உறவு வேறு. கொள்கை முரண் வேறு. பெற்ற தாய் தந்தையராகவே இருந்தாலும், எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால், எதிரி எதிரிதான். கடவுளே ஆனாலும் கொள்கைக்கு எதிராக வந்தால் எதிரிதான். ரத்த உறவை விட லட்சிய உறவுதான் மேலானது. அண்ணன், தம்பி என்பது வேறு. கொள்கை என்று வந்துவிட்டால் பகைதான்" என பேசினார்.
விசிக- தவெக கூட்டணி குறித்த கேள்விக்கு, "திருமாவளவன் எங்களுடைய ஆசிரியர். அவருடைய மாணவர்கள் நாங்கள். நாங்களே இவ்வளவு நிதானமாக இதை அணுகும் போது, அவர் ஒருபோதும் இதுபோன்று சிறுபிள்ளைத்தனமாக இறங்க மாட்டார்" என பதிலளித்தார்.