முதலைக்கண்ணீர் சிந்தும் ஸ்டாலின்..தெருவில் நிற்க வைப்பது தான் சமூக நீதியா? சீமான் காட்டம்!
அரசு மருத்துவர் குடும்பத்தை தெருவில் நிற்க வைப்பது தான் சமூக நீதியா? என சீமான் சாடியுள்ளார்.
சீமான் காட்டம்
கொரோனோ பெருந்தொற்றுப் பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசு,
குறைந்தபட்சம் கொரோனா தொற்றுப் பணியின்போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியைக்கூடச் செய்ய மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. கொரோனோ பெருந்தொற்றுக் காலம் முதல் தற்போதைய டெங்கு தொற்றுக் காலம் வரை தம் உயிரைப் பொருட்படுத்தாது,
மக்கள் உயிர் காக்க முன்கள வீரர்களாக முனைப்புடன் கடமையாற்றி வருபவர்கள் அரசு மருத்துவர்கள். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் விரைந்து கட்டுக்குள் வர அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புமிக்கக் கடின உழைப்பே முதன்மையான காரணமாகும்.
சமூக நீதியா?
தமிழ்நாட்டின் 18000 அரசு மருத்துவர்கள்தான் கோடிக்கணக்கான ஏழை-எளிய தமிழக மக்களின் நல்வாழ்விற்கு ஆணிவேராக உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது தங்கை திவ்யாவிற்காக முதலைக் கண்ணீர் சிந்திய ஐயா ஸ்டாலின் அவர்கள்,
முதல்வரான பிறகு கோரிக்கைப் பெட்டியை சாவியோடு தொலைத்துவிடுவதற்குப் பெயர்தான் திராவிட மாடல்! தங்கை திவ்யா தன்னுடைய பச்சிளம் குழந்தைகளோடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களைப் பலமுறை சந்தித்து மன்றாடியும் இன்றுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை.
கள்ளச்சாராயம் குடித்துச் செத்தால் 10 லட்சம், உயிரைக் காப்பாற்றும் அரசு மருத்துவர் செத்தால், அவரது குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைப்பதுதான் திமுக அரசு கடைப்பிடிக்கும் சமூக நீதியா?! என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.