வருண்குமார் ஐபிஎஸ்தான் சமாதானம் பேச ஆள் அனுப்பினார் - சீமான்
தமிழகத்தில், எங்கு குற்றச் செயல்கள் நடந்தாலும் அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீமான் கைது
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம் முன்பு ஆர்ப்பாட்டம் அறிவித்தனர்.
ஆனால் காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளிக்காத நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தாக நாம் தமிழர் கட்சியினர் மற்றும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டு பெரியமேடு பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.
சிசிடிவி கேமரா
அதன் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "எத்தனை ஆயிரம் முதல் தகவல் அறிக்கை பதிவாகும்போது, இது மட்டும் எப்படி வெளியே வந்தது. இதில், மட்டும் எப்படி தொழில்நுட்பக் கோளாறு வந்தது.
மத்திய அரசு கூறினால், அதை நாங்கள் நம்பவேண்டுமா? இதுவரை தமிழகத்தில், எங்கு குற்றச் செயல்கள் நடந்தாலும் அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை. கர்நாடகாவில் முதல்வர் படத்தின் மீது காலணி வீசப்பட்டபோது, தமிழகத்தில் யாரும் கண்டிக்கவில்லை. நான் தான் சம்பவத்தைக் கண்டித்தேன்.
போராட்டம் என்ற பெயரில் நாங்கள் நடத்துவது நாடகம் என்றால், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எத்தனை போராட்டங்களை நடத்தியது, அதற்குப் பெயர் என்ன? என பேசினார்.
வருண்குமார் ஐபிஎஸ்
அதை தொடர்ந்து வருண்குமார் ஐபிஎஸ்ஸிடம் மன்னிப்பு கேக்க முயற்சித்ததாக அவர் கூறியது குறித்து கேள்வி எழுப்பிய போது, "ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாரிடம் எதற்காக நான் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவருக்கு பயந்துகிட்டு நான் மன்னிப்புக் கேட்க வேண்டுமா?
நாகரிகம் கருதி சில அதிகாரிகள் மற்றும் பத்திரிகையின் பெயர்களை கூற விரும்பவில்லை. அனைவரையும் அனுப்பி, எனக்கும் அவருக்கும் பிரச்சினை வேண்டாம், அதை முடித்துவைக்கும்படி அனுப்பி வைத்தவர் வருண்குமார். என்னிடம் மோதி தன்னை ஒரு ஆளாக காட்டிக்கொள்ள அவர் நினைக்கிறார். அவர் சரியான ஆண்மகன் என்றால் எனக்கு தண்டனைப் பெற்றுத் தரட்டும்.
இந்த அரசு என்னுடன் மோத துப்பு இல்லாமல், இவரை முன் வைத்து பின்னாடி இருந்து ஆட்டம் காட்டிக் கொண்டு இருக்கிறது. இதற்காக இந்த அரசு பதவி உயர்வு அளிக்கிறது. வருண் குமார் என்னை என்ன செய்துவிடுவார்? மோதுறதுனு ஆகிவிட்டது. மோதி விட வேண்டியது தான். நீ போலீஸ் பயிற்சி பெற்றவன். நான் போராளி பயிற்சியாளன்" என கூறினார்.