அன்புமணியை தலைவராக்க காரணம் இதுதான் - ராமதாஸ் சொன்ன ரகசியத்தை பகிர்ந்த சீமான்
அன்புமணியை தலைவராக்கியது ராமதாஸ் தன்னிடம் தெரிவித்த கருத்துக்களை சீமான் பகிர்ந்துள்ளார்.
பாமக பொதுக்குழு
நேற்று நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமன் என்பவரை நியமிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
இதனால் மேடையிலேயே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
அன்புமணி விளக்கம்
நான் பனையூரில் தனி அலுவலகத்தை தொடங்கியுள்ளேன். என்னை அங்கு சந்திக்கலாம்" என அறிவித்து விட்டு மேடையிலிருந்து கிளம்பி பனையூர் சென்றார் அன்புமணி ராமதாஸ். இது நான் வளர்த்த கட்சி. நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கட்சியில் இருக்க முடியாது என ராமதாஸ் தெரிவித்தார்.
இதனிடையே இன்று தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் சந்திப்பு நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், "பாமக ஒரு ஜனநாயகக் கட்சி. கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடைபெறுவது சகஜமே. எங்களுக்கு ஐயா எப்போதும் ஐயாதான்" என கூறினார்.
சீமான்
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், ராமதாஸ் - அன்புமணி கருத்து மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இதில் கருத்து சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை. நான் ஐயாவின் பக்கத்தில் இருந்து பார்த்தவன். ராமதாஸ், அன்புமணி இரண்டு பேரும் என் மதிப்பிற்குரியவர்கள்.
ஒரு கட்சியை வழிநடத்தும்போது இது போன்ற பிரச்சனைகள், முரண்பாடுகள் வரும். பின்னர் அது சரியாகிவிடும். 35 வருடமாக கட்சி நடத்துகிறார். இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. என் நெற்றியில் ஜாதி பெயர் ஏதாவது எழுதி இருக்கிறதா என கேட்டவர்தான் ராமதாஸ். அவர் வரும்போது தெளிவாகத்தான் வந்தார். கால சூழ்நிலை அவர் அதுபோன்று தள்ளப்பட்டுவிட்டார்.
பெரியார்
முதலில் தலித் ஏழுமலைக்கு கொடுத்தேன். எல்லாருக்கு கொடுத்து விட்டு கடைசியாக வேறு வழி இல்லாமல்தான் அன்புமணிக்கு கொடுத்தேன் என என்னிடம் அவர் கூறினார். அவருக்கு நம்பகமான ஆள் வேண்டும் என அன்புமணிக்கு அளித்துள்ளார். இதில் நாம் ஒன்றும் சொல்ல முடியாது.
தற்போது திராவிடர் கழக தலைவராக உள்ள வீரமணி அன்றும் ஐயா பெரியாருடன் இருந்தார். ஆனால் தனக்கு பின்னால் சொத்துகளை நிர்வகிக்க வேறு ஒரு நம்பிக்கை தேவைப்பட்டதால் மணியம்மையை திருமணம் செய்தார் அதே போல்தான் இதை பார்க்க வேண்டும்" என கூறினார்.