மோதலுக்கு பின் ராமதாஸுடன் சந்திப்பு - அன்புமணி கொடுத்த விளக்கம்
பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்த பின் அன்புமணி ராமதாஸ் செய்தியர்களுக்கு பேட்டியளித்தார்.
பாமக பொதுக்குழு
நேற்று நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமன் என்பவரை நியமிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்கு மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நான் பனையூரில் தனி அலுவலகத்தை தொடங்கியுள்ளேன். என்னை அங்கு சந்திக்கலாம்" என அறிவித்து விட்டு மேடையிலிருந்து கிளம்பி பனையூர் சென்றார்.
சமாதான பேச்சு
இது நான் வளர்த்த கட்சி. நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கட்சியில் இருக்க முடியாது என ராமதாஸ் தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் பொதுக்குழு மேடையிலே மோதிக்கொண்ட சம்பவம் தமிழக அரசியலில் பேசுபொருளானது.
இதனையடுத்து பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் ராமதாசிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, ஜிகே.மணி, வழக்கறிஞர் பாலு, பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
எப்போதும் ஐயா
ஒரு மணி நேர சந்திப்பிற்கு பின்னர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் பேசிய அவர், "2026 சட்டப்பேரவைத் தேர்தல், சித்திரை முழுநிலவு மாநாடு, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான போராட்டங்கள், 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு, அடுத்தடுத்து பாமக முன்னெடுக்க வேண்டிய போராட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.
வரும் ஆண்டு எங்களுக்கு முக்கியமான ஆண்டு. மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பாமக ஒரு ஜனநாயகக் கட்சி. கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடைபெறுவது சகஜமே. கட்சியின் உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். எங்களுக்கு ஐயா எப்போதும் ஐயாதான்" என பேசினார்.
முகுந்தன் நியமனத்திற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், முகுந்தன் தற்போது வகித்து வரும் மாநில ஊடகப் பேரவை செயலாளர் பதவியில் இருந்து விலகி அடிப்படை உறுப்பினராக தொடர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.