பெரியார்தான் வேண்டுமென்பவர்கள் கட்சியை விட்டு விலகலாம் - சீமான் அதிரடி
உலகமே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என சீமான் பேசியுள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாகவே பெரியார் என அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார். நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போதும், சீமான் தனது விமர்சனத்தை நிறுத்தவில்லை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,15,709 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 24,151 வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2 ஆம் இடம் பிடித்தார். இதன் பின்னர் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, சீமான் பெரியாரை கொஞ்சம் ஓவராக பேசிவிட்டாரோ என தோன்றுகிறது என கூறினார்.
பெரியார்
இந்நிலையில் இன்று(10.02.2025) திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "பெரியார் குறித்துஇப்போதுதான் நான் பேசத்தொடங்கியுள்ளேன். அதற்குள்ளாகவே ஓவராக பேசுகிறேன் என்றால் கொஞ்சம் கஷ்டம் தான். விலகி செல்லலாம் பெரியார் ஆதரவு நிலைப்பாட்டில் தான் இருந்தேன். தற்போது ஒரு தெளிவு வந்துள்ளது.
பெரியாரை கொண்டாடுபவர்கள் கொள்கைக்கானவர்கள் அல்ல, நம்மை கொள்ளையடிக்க வந்தவர்கள். ஈழத்தில் ஈழத்தில் நேதாஜி, எம்ஜிஆர் படம் இருந்தது. பெரியார் படம் இல்லை. என் அண்ணன் எப்போது பெரியாரை பற்றி பேசியுள்ளார். புலிகளை சாகடிக்க வேண்டும் என்று நினைத்தது திராவிடம். இன்றைக்கு அவரின் பிள்ளைகள் வந்து அடிக்கும்போது உயிரிழந்தவரை துணைக்கு அழைத்துக்கொண்டு வருகிறீர்கள்.
உலகமே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் எப்போதும் பெரியாரை எதிர்க்கத் தான் செய்வேன். நீங்கள் வேண்டுமானால் கொண்டாடுங்க ஏத்துக்கோங்க. சொந்த பெரியார் ஆயிரம் பேர் எனக்கு இருக்கிறார்கள். எங்கிருந்தோ வந்த பெரியார் எனக்கு தேவையில்லை. என்னை பின்பற்றுபவர்கள் பெரியார் தான் வேண்டுமென்றால் என்னை விட்டு விலகி செல்லலாம்" என கூறினார்.
நாம் தமிழர் வாக்குகள்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். நாங்கள் பெற்றது எங்களது சொந்த வாக்கு. ஆனால் திமுக தனித்து நின்றோ, பணம் கொடுக்காமலோ வாக்குகளைப் பெற முடியாது.
நாம் தமிழர் கட்சி தனித்து பெற்ற வாக்குகளை அதிமுக, பாஜக வாக்குகள் என திராவிடம் முத்திரை குத்துகிறது. 15 கட்சிகளின் கூட்டணி வைத்து வாக்குகளைப் பெறுகிற திராவிடம்தான் இப்படி பேசுகிறது. அதிமுக, பாஜகவினர் எதற்காக எனக்கு வாக்குகளை போட வேண்டும்? அவர்கள் நான் வளர வேண்டும் என விரும்புவார்களா? என்னுடைய கோட்பாடு இந்திய மற்றும் திராவிட கட்சிகளுக்கு எதிரானது" என பேசினார்.