பெரியார் ஆரிய தலைமையுடன் நட்பில் இருந்தார் - சீமான்
பெரியார் குறித்து பேச பொது விவாதத்திற்கு தயாராக உள்ளேன் என சீமான் பேசியுள்ளார்.
சீமான்
சென்னையில் போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் பெரியாருக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. ஆனால் பெரியாரை ஆதரித்து பேசும் இத்தனை தலைவர்களில், ஒருவராவது தேர்தலில் பெரியாரின் சித்தாந்தங்கள், தத்துவங்களை பேசி வாக்கு சேகரிக்க தயாராக இருக்கிறீர்களா?
ஆரிய நட்பு
நான் என் தலைவனின் பெயரை சொல்லி வாக்கு சேகரிக்க தயாராக இருக்கிறேன். அப்படிதான் தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற கட்சியாக வளர்ந்திருக்கிறேன். பொங்கல் தினத்தன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிப்போம்.
பெரியாருக்கு மொழி, நாடு அபிமானம் கிடையாது. அதனால் அவர் மீது எங்களுக்கு அபிமானம் கிடையாது. பெண் உரிமை பற்றி பேச என் தலைவனுக்கு மட்டுமே தகுதி உள்ளது. கருப்பையை அறுத்து வீசு என்றார் பெரியார். அதுதான் மகளிர் சுதந்திரம் என்று கூறினார், அது சரியானதா?
திராவிட எதிர்ப்பு என்று பேசினால் ஆரியம் உள்ளே வந்துவிடும் என பேசுகிறார்கள். ஆனால், திராவிடத்தை ஆதரித்த பெரியார் ஆரிய தலைமையுடன் நட்புடன் இருந்தார். பெரியார் மணியம்மையை திருமணம் செய்த போது ஆரியர் ராஜாஜியை துணைக்கு அழைத்தார்.
சமூக நீதி
வள்ளலார், ஐயா வைகுண்டர் போல என்ன புரட்சியை செய்தார் பெரியார்? பெரியார் குறித்து பேச பொது விவாதத்திற்கு நான் இரு கரம் நீட்டி தயாராக உள்ளேன். அம்பேத்கர், பெரியார் கொள்கைகள் ஒன்று என நிரூபிக்க என்னுடன் விவாதிக்க தயாரா?
சமூக நீதி என்பது என்ன? அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிப்பது. கலைஞர் காலத்தில் அவரது வீட்டிலேயே இரண்டு அமைச்சர்கள், தற்போதும் அதே நிலைதான் தொடர்கிறது. இதுதான் சமூக நீதியா? இது சனாதனம். பெண்ணுரிமை என்று பேசும் திமுகவில் கட்சியில் ஆட்சியில் மகளிருக்கு சம ஒதுக்கீடு வழங்கப்படுகிறதா? நாம் தமிழர் கட்சியில் மட்டும்தான் அனைத்திலும் 50%.
பொங்கலன்று யுஜிசி தேர்வை நடத்தும் மத்திய அரசு வட இந்திய பண்டிகைகளின்போது தேர்வு நடத்துமா? தமிழ்நாட்டில் கேட்க ஆளில்லாததால் மத்திய அரசு இவ்வாறு நடந்து கொள்கிறது" என பேசினார்.