விஜய் ரசிகர்களே எனக்குதான் வாக்களிப்பார்கள் - சீமான் நம்பிக்கை
கூட்டணிக்கு செல்வதாக இருந்தால் ஜெயலலிதா, மோடி அழைத்த போதே சென்றிருப்பேன் என சீமான் பேசியுள்ளார்.
சீமான்
தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று (29.10.2024) தேனியில் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், “ ஓட்டுக்கு காசு கொடுக்காமல் யாரும் தேர்தலை சந்திப்பது இல்லை. கூட்டணி இல்லாமல் யாரும் தனித்து போட்டியிடுவது இல்லை.
ஒற்றை கட்சி ஆட்சி
இதுவரை திமுக, அதிமுக, தனித்து போட்டியிட்டது இல்லை. ஒரே ஒருமுறை 2014 ல் ஜெயலலிதா தனித்து போட்டியிட்டார். இந்தியாவிலேயே பலமுறை தோல்வி கண்ட பிறகும் தொடர்ந்து தனித்து நிற்கக்கூடிய ஒரே கட்சி நாம் தமிழர் தான்.
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தனித்து தான் போட்டியிடுவேன். கொள்கையில் சமரசம் இல்லை. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., மத்தியில் ஆள்வதால், எந்த மாநிலத்திற்கும் உரிமை இருக்காது. எந்த மாநில உரிமைகளையும் பாதுகாக்காது. எந்த மாநில மொழிகளையும் வாழவிடாது.
ஒற்றை கட்சி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும். நாட்டில் கூட்டாட்சி இருக்கும் போது தான் நாடு நன்றாக இருந்தது. கூட்டணி வைக்காத மாநிலத்திற்கு என்ன சேவை செய்து இருக்கிறார்கள்.
விஜய் ரசிகர்கள்
என்னைப் பொறுத்தவரை என் இனத்தின் எதிரி காங்கிரஸ். பாஜக மானுட குலத்தின் எதிரி. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும் போது அவர்களது ரசிகர்களைச் சந்தித்துத்தான் அரசியலுக்கு வந்தனர். நான் ரசிகர்களை சந்திக்கவில்லை. எனக்கு ரசிகர்கள் கிடையாது.
நான் மக்களைச் சந்தித்து அரசியலுக்கு வந்தேன். பொதுவாக ஒரு நடிகரைப் பார்ப்பதற்காகக் கூட்டம் அதிகளவு வரும். ஆனால் கூட்டத்திற்கு வந்தவர்களின் வாக்குகள் எல்லாம் கிடைக்கும் என்பது சந்தேகம்தான். விஜய்யின் அரசியல் வருகையால் எனது வாக்குகள் குறையாது. ஏனென்றால் விஜய்யின் ரசிகர்களே எனக்குத் தான் வாக்களிப்பார்கள்.
தனித்து போட்டி
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என விஜய் கூறுவது அவரின் பெருந்தன்மை. யார் யாருடன் கூட்டணிக்கு செல்வது என்பது அவரவர்களின் உரிமை. “ஆட்சி மாற்றம் ஆள் ஏமாற்றம் என்பது எங்கள் கொள்கை இல்லை.
அடிப்படை அரசியல் மாற்றம் என்பது தான் எங்களின் கொள்கை நான்கு, ஐந்து சீட்டுகள் பெறுவதுதான் எங்கள் இலக்கு என்றால் ஜெயலலிதா, மோடி அழைத்த போதே சென்றிருப்பேன். நான் நாட்டுக்காக வந்தவன். நாங்கள் என்றுமே தனித்துதான் போட்டியிடுவோம்" என பேசினார்.