விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணியா? விளக்கமளித்த எடப்பாடி பழனிசாமி
அதிமுக நன்றாக செயல்படுவதால்தான் விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் 171 நலிந்த நிலை தொழிலாளர்களுக்கு ரூ.1.71 கோடிக்கான காசோலையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும் படி அறிவுறுத்தினார்.
தவெக கூட்டணி
இதன் பின் விஜய்யின் தவெக மாநாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் மாநாடு நடத்துகின்றனர். இந்த அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அதன் தலைவர், சகோதரர் விஜய், மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார். அவருடைய அழைப்பை ஏற்று அவரது ரசிகர்கள், அவருக்கு துணையாக நிற்கும் விதமாக அந்த மாநில மாநாட்டில் பங்கேற்று நடைபெற்று முடிவடைந்துள்ளது என கூறினார்.
கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பகிர்வு குறித்த கேள்விக்கு, "ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின் அடிப்படையில் அவர் தெரிவிக்கிறார். அதில் இது சரியா அது சரியா என்று நாம் சொல்ல முடியாது" என பதிலளித்தார்.
விஜய்யுடன் பிற்காலத்தில் கைகோர்க்க தயாரா என்ற கேள்விக்கு, "தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. இப்பொழுது தான் அவர் கட்சி ஆரம்பித்து, முதல் மாநில மாநாடு நடத்தி இருக்கிறார். ஒவ்வொரு கட்சிக்கும் நிலைப்பாடு இருக்கிறது. கூட்டணி என்பது அந்தந்த சூழ்நிலைக்கு தக்கவாறு அமைக்கப்படும்" என தெரிவித்தார்.
திமுக கூட்டணி
விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்ற கேள்விக்கு, "அதிமுகவை விஜய் அதிகமாக விமர்சிக்கவில்லை என்றால் அதிமுக நன்றாக செயல்படுகிறது என்று அர்த்தம்" என பதிலளித்துள்ளார்.
மேலும், அதிமுகவிற்கு ஒரு கொள்கை இருக்கிறது. அதன்படிதான் நாங்கள் நடப்போம். ஒவ்வொரு கட்சிக்கும் அப்படி கொள்கை இருக்கிறது. கொள்கையே இல்லாத கட்சிகள் திமுக கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகள் தான்.
திமுக பாஜக டீலிங்
நாங்கள் ஒத்த கொள்கையுடைய கூட்டணியில் இருக்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார். அப்படியென்றால் திமுக மற்றும் அதனுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் எல்லாம் ஒத்தக்கொள்கை உடைய கட்சிகள் என்றால் ஒரே கட்சியாக இருந்திருக்கலாமே ஏன் தனித்தனியாக கட்சி இருக்கிறது.
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு. கூட்டணி தேர்தல் நேரத்தில் உருவாக்கப்படுவது. ஆனால் கொள்கை என்பது நிலையானது. திமுகவிற்கும் பாஜகவிற்கும் டீலிங் இருக்கிறது என ஏற்கனவே நாங்கள் சொன்னதை விஜய்யும் சொல்லி இருக்கிறார்" என பேசினார்.