ராமதாஸும் திருமாவளவனும்தான் எனது அரசியல் ஆசான்கள் - சீமான்
பெரியார் தலைமையேற்க முடியாது என்பதால் தமிழர் கழகம் திராவிடர் கழகம் என பெயர் மாற்றபட்டது என சீமான் பேசியுள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "தமிழ் தேசிய அரசியலின் எழுச்சியால் தான் ஆதி தமிழர்களுக்கு உயர் கல்வி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்று நான் பேசும் அரசியலுக்கு ஆசான் அண்ணன் திருமாவளவனும் மருத்துவர் ராமதாஸும்தான்.
தமிழர் கழகம்
தமிழர்கள் என்று இருந்தால் பிராமணர்கள் வந்து விடுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் தமிழர் கழகம் என்று இருந்தால் ஐயா பெரியார் தலைமையேற்க முடியாது என்றுதான் திராவிடர் கழகமாக மாற்றப்பட்டது. திராவிடர்கள் தலைமையேற்க முடியாது என்பதற்காகதான் தமிழர் கழகம் என்ற பெயர் மாற்றப்பட்டது.
ஆரியம்போல் என்ற சொல்லை ஏன் நீக்கினார்கள் என்றால், அதுக்கு ஒரு விளக்கம் சொல்கிறார்கள். ஆரியர்கள் மனது புண்படும் என்று சொல்கிறார்கள். பாரதிதாசன் எழுதிய பாடல் புதுச்சேரியில் தமிழ்த்தாய் வாழ்த்தாக உள்ளது. நான் ஆட்சிக்கு வந்தால் அதனை தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றுவேன். தமிழ்நாட்டிலும், புதுச்சேரிலும் ஒரே பாட்டாக இருக்கட்டும்.
பெரியாரை பற்றி பேச திமுகவிற்கு என்ன அருகதை உள்ளது. மதுவுக்கு எதிராக பெரியார் தோட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டினார். சாராய ஆலைகளை நடத்திக்கொண்டு திமுக ஏன் பெரியாரை பற்றி பேசுகிறது?
பெண்களுக்கு இட ஒதுக்கீடு
40 தொகுதிகளில் 20, 234 தொகுதிகளில் 117 என நாங்கள் பெண்களுக்கு சம பாதி சீட் கொடுக்கிறோம். திமுக பெண்களுக்கு எத்தனை சீட் கொடுத்தது? 22 தொகுதிகளில் திமுக இஸ்லாமியர்களுக்கு எத்தனை சீட் கொடுத்தது? 40 தொகுதிகளில் நாங்கள் 5 சீட் வழங்கினோம். இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் சிறுபான்மையினர் என்றால் நீங்கள் யார்?
ஐரோப்பிய நாடு முழுக்க கிறித்துவர்கள்தான் ஏன் இத்தனை நாடு வந்தது? இந்தியா மொழி வாரியாக இன வாரியாகதான் பிரிக்கப்பட்டது. மதம் மாறிகொள்ளக்கூடியது. இனமும் மொழியும் மாற்றிக்கொள்ள முடியாது.
மதங்களும் மார்க்கங்களும் வரும் முன்னே அவர்கள் தமிழர்களாக இருந்தார்கள்.பெரியாரை பேசாத பிஹாரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏன் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
கருணாநிதியின் பேரன் என்பதை தவிர துணை முதல்வராவதற்கு உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது? பிறப்ப்பின் அடிப்படையில் பதவி வழங்குவதுதான் சனாதனம்" என பேசினார்.