விஜய் இதயத்தில் வலியோ காயமோ இல்லை - சீமான் கடும் விமர்சனம்
விஜய் பேசியது திரைப்பட வசனம் போல் உள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார்.
விஜய் வீடியோ
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக 3 நாட்கள் தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றில் விளக்கமளித்தார். விஜய்யின் இந்த விளக்கம் பலரிடமும் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த வீடியோ தொடர்பாக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதயத்தில் வலி இல்லை
இது குறித்து பேசிய அவர், "கரூர் துயரம் குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோவில் எனக்கு உடன்பாடில்லை. விஜய் பேசியது திரைப்பட வசனம் போல் உள்ளது. சிஎம் சார் எனச் சொல்வதே சின்னப்பிள்ளை பேசுவது போல இருக்கிறது. இது நல்ல அணுகுமுறை இல்லை.
அவர் மீது உங்களுக்கு மதிப்பு இல்லாமல் போகலாம். அவர் உட்கார்ந்திருக்கும் நாற்காலியில் இந்த நாட்டில் பெரும் தலைவர்கள் அமர்ந்துள்ளனர். பெருந்தலைவர்கள் அமர்ந்திருந்த இடம் என்பதால் பார்த்து பேச வேண்டும்.
விஜய் வீடியோவை பார்க்கும்போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. இருந்திருந்தால் அவரது மொழியில் அது வெளிப்பட்டு இருக்கும். உருக்கமாக பேசி விஜய் வீடியோ வெளியிட்டிருக்க வேண்டும். வீடியோவில் பேசும்போது விஜய் வலியை கடத்தவில்லை.
விஜய் அந்த இடத்துக்கு சென்றதால் தான் நிகழ்ந்தது. அவர் போகவில்லை என்றால் இது நடந்திருக்காது. அப்படி என்றால் காரணம் யார்? மற்ற இடங்களில் எல்லாம் நடக்கவில்லை என்று சொல்கிறீர்கள். அங்கும் நடந்திருக்க வேண்டும் என்கிறீர்களா?
எல்லா கூட்டத்திலும் மயங்கி விழுந்தார்கள், இங்கு கூட்ட நெரிசல் அதிகம் என்பதால் மிதித்து பலர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் கத்தியால் குத்துப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்களை ஒருவரைக் கூட பார்க்கவில்லை" என பேசியுள்ளார்.