விஜய் உடன் கூட்டணி இல்லை; நாம் தமிழர் தனித்து போட்டி - சீமான் அதிரடி
2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என சீமான் அறிவித்துள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது பேசிய அவர்,பார்முலா பந்தயத்தில் விளையாடுவது யார்? சிற்றூரில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு வசதிகளை செய்து தர வேண்டும்.
கார் ஓட்ட சோழவரத்தில் திடல் உள்ள போது அங்கே ஒட்டாமல் 2 மருத்துவமனை உள்ள இடத்தில் ஓட்டுவது ஏன்? சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. அதை சீரமைக்கலாம். பள்ளிக்கூடங்களில் மேற்கூரை கீழே விழுகிறது. அதை சீரமைக்கலாம். ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க காசு இல்லாத போது கார் பந்தயம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
போதை
மேலும், இத்தனை லட்சம் கோடி முதலீடு வந்திருக்கும் போது கடன் எப்படி வந்தது? இதற்கு முன் அரபு நாடுகளிலிருந்து வந்த முதலீடு எங்கே? இந்திய விடுதலை பெரும் முன் ஒரு நாட்டுக்கு தான் அடிமையாக இருந்தோம். இப்போது அந்நிய முதலீடு என்ற பெயரில் பல நாடுகளுக்கு அடிமை ஆகியுள்ளோம்.
பாலியல் சீண்டலுக்கு காரணம் போதைதான். இதற்கு முன் ஒரு ஒழுக்கம் கட்டுப்பாடு இருந்தது. கொலை, வன்புணர்வு, பாலியல் சீண்டல் எல்லாம் நடப்பதற்கு காரணம் போதைதான். ஆனால் ஆம்ஸ்ட்ராங் கொலையில் சின்ன பசங்க ஈடுபட்டதற்கு காரணம் போதைதான். என பேசினார்.
தனித்து போட்டி
தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி உறுதியா என்ற கேள்விக்கு, "2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். 60 தொகுதிகளுக்கு வேட்பாளரை நியமித்து விட்டேன். மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறேன்" என கூறியுள்ளார்.
2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கும் என அனைவரும் யூகித்து வந்த நிலையில், தனித்து போட்டி என கூறி சீமான் அந்த யூகத்துக்கு சீமான் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.