நாங்கள் தனி நாடு கேட்கவில்லை; இந்த நாடே என்னுடையதுதான் – சீமான்
பாராளுமன்றத்தில் ஏன் தமிழில் கல்வெட்டு இல்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நூல் வெளியீட்டு விழா
சென்னையில் நடந்த "பெரியவர் தோழர் தமிழரசன்" நூல் வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்வில் அவர் பேசியதாவது, "நாங்கள் தனி நாடு கேட்கவில்லை, ஏன் கேட்கவில்லை ஏனென்றால் இந்த நாடு எங்கள் நாடு. 'பாரத நாடு பைந்தமிழர் நாடு. பகைவர் அனைவரும் ஓடு' என்ற முழக்கத்தை முன் வைக்க வேண்டும்.
சீமான்
இந்தியாவை இந்துக்கள் நாடு என சொல்வதை ஏற்க மாட்டேன் இந்திய நிலம் முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் வாழ்ந்தனர் என அம்பேத்கர் சொன்னார். அதை மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு வழிமொழிந்தார்.
தெற்காசிய நாடுகள் முழுவதும் வாழ்ந்தவர்கள் தமிழர்கள், மற்றவர்கள் இங்கு வந்து குடி பெயர்ந்தவர்கள். திருச்சி வானூர்தி நிலையத்தில் சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைத்துளீர்கள். சமஸ்கிருதம் படி என்று சொல்கிறார்கள், படித்தால் எந்த கோயிலில் வேலை கொடுப்பார்கள். பாராளுமன்றத்தில் ஏன் தமிழில் கல்வெட்டு இல்லை.
தமிழ்நாடு
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் எல்லாம் ஏற்கிறேன், ஏன் காவிரியில் எனக்கு நீர் இல்லை. என் நிலக்கரி, பெட்ரோல், மின்சாரம் எல்லாருக்கும் பொது. ஆனால் காவேரி உரிமை கன்னடருக்கா? முல்லை பெரியாறு உரிமை மலையாளிகளுக்கா? என கேள்வி எழுப்பினார்.
பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழி ஹிந்தி என்றால் இந்தியாவில் பல நாடுகள் உருவாகுவதை யாரும் தடுக்க முடியாது. ஹிந்தி, நீட் என எதை கொண்டு வந்தாலும் இந்த ஒரு நிலம் எதிர்க்கும்" என பேசினார்.