10 ஆண்டுகள்..பணி நியமனத்தில் மிகப்பெரிய முறைகேடு - தமிழக அரசை விளாசிய சீமான்!
அரசுப்பள்ளிகளில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான நியமனத் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் உள்ளதாக சீமான் குற்றம் சட்டியுள்ளார்.
இடைநிலை ஆசிரியர்
இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மறுநியமனத் தேர்வு முறையை ரத்து செய்வோம்,
தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பணியாணை வழங்குவோம் என்று வாக்குறுதியளித்து ஆசிரியப்பெருமக்களின் நம்பிக்கையைப் பெற்று,அவர்களின் முழுமையான ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளாகியும்,
அதனை நிறைவேற்ற மறுத்ததோடு, ஆசிரியர் நியமனத் தேர்வினை கட்டாயம் என அறிவித்து வாக்களித்த ஆசிரியர் பெருமக்களுக்குப் பச்சைத் துரோகம் புரிந்தது.கடந்த 2013ஆம் ஆண்டு 25-35 வயதுகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும் பணி வழங்கப்படாததால்,
தேர்வர்களில் பலரும் தற்போது 35-45 வயது நிறைந்தவர்களாகிவிட்டனர்.இருப்பினும் மீதமுள்ள பணிக்காலத்திற்காவது அரசுப்பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிலேயே தற்போது அவர்கள் மறு நியமனத்தேர்வினையும் எழுதிக் காத்திருக்கின்றனர்.
ஆனால், தேர்வின் விடைக்குறிப்புகளைக் கூட வெளியிடாமல் காலதாமதம் செய்வது, பணி நியமனத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெறுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
சீமான்
அரசுப்பள்ளிகளில் தற்போது 10000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 3190 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே தற்போது நிரப்பப்பட உள்ளனர். மேலும், ஏறத்தாழ 6000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில்,
வெறும் 2700 பணியிடங்கள் மட்டுமே நியமனத் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என திமுக அரசு அறிவித்திருப்பது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமையாகும். அரசுப்பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளதால், மாணவர்களின் கல்வி கடுமையாகப் பாதிக்கப்படும் கொடுஞ்சூழலும் நிலவுகிறது.
ஆகவே, இனியும் காலதாமதம் செய்யாமல் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்கான நியமனத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுவதோடு, காலியாகவுள்ள பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை சீமான் வலியுறுத்தி உள்ளார்.