அடுத்து அடுத்து நாதக கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகள்...குற்றச்சாட்டுக்கு சீமான் பதில்!
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
நிர்வாகிகள்..
அண்மையில், கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கரு.பிரபாகரன் தலைமையில் செய்தியாளர்களைச் சந்தித்து, “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாவட்ட நிர்வாகிகளோடு எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார்.
இத்தனை வருடங்கள் ஆகியும் ஒரு எம்எல்ஏ கூட பெறமுடியவில்லை” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். நாங்கள் கஷ்டப்படுகிறோம். தாலியை அடகு வைத்து கட்சி நடத்தினோம். சீமான் வீட்டில் 15 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள்,
அவர் சொகுசாக வாழ்கிறார் என பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வைத்திருந்தனர். மேலும், கட்சியை விட்டு விலகுவதாகவும் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட வடக்கு செயலாளர் அபூ.சுகுமார், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். நான் செய்வதைத்தான் செய்வேன், யாரும் என்னை கேள்விக் கேட்க கூடாது,
இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று சீமான் பேசியதால், அவரது நிலைப்பாட்டை கண்டித்து விலகுவதாக சுகுமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது
சீமான் பதில்
நிர்வாகிகள் விலகல் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த சீமான், கட்சி மீது அதிருப்தியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எப்போதும் இருப்பதுதான். திடீரென்று அவர்களுக்கு அதிருப்தி வரும்.
அவர்களுக்கு திருப்தி இருக்கிற இடங்களுக்கு போய் சேர்ந்துகொள்ள வேண்டியதுதான். இது ஒரு பெரிய சிக்கலே கிடையாது. இதனால் நாட்டுக்கும், மக்களுக்கும் பெரிய பிரச்சனை கிடையாது. தாலியை அடகு வைத்து கட்சிக்கு பாடுபட்ட ஒருவரை கொண்டு வாருங்கள்.
அந்தக் குற்றச்சாட்டு சொன்னவர் யார்? கட்சிப் பேரை சொல்லி ரூ.5 கோடி காசு வசூல் செய்திருக்கிறார்கள். என்னுடைய முகத்திற்காக, காசு கொடுத்தவர்கள் வழக்கு தொடராமல் இருக்கிறார்கள். அதை வெளியில் சொன்னால் என் தகுதிக்கு, தரத்துக்கு அழகா?
ஒரு வளர்ந்து வரும் கட்சிக்குள் இதுபோன்ற சின்னச் சின்ன பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் இதையெல்லாம் ஒரு பெரிய பிரச்சனையாக நினைக்கக்கூடாது. இது என்னுடைய கட்சி பிரச்சனை, என் பிரச்சனை. இதில் நாட்டுக்கும், மக்களுக்கும் பிரச்சனை கிடையாது என்று தெரிவித்துள்ளார்.