தலித் முதல்வராக முடியாது என்ற திருமாவளவன் கருத்தை ஏற்கிறேன்; ஆனால்... - சீமான்
தலித் முதல்வராக முடியாது என திருமாவளவன் பேசியது குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
திருமாவளவன்
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் வகையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருப்பதாகவும், பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி விசிக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள் வரலாம், போகலாம். ஆனால் ஒரு காலத்திலும் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் தமிழகத்தின் முதல்வராக ஆக முடியாது. ஆனால் திமுக மீது நம்பிக்கை இருக்கிறது என பேசினார்.
சீமான் ஆதரவு
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு முதலமைச்சராக ஒரு தலித் வர முடியாது என்ற திருமாவளவனின் கருத்தை நான் ஏற்கிறேன். ஆனால் திமுகவின் மீது நம்பிக்கை இருக்கிறது என அவர் கூறியதை எதிர்க்கிறேன். கூட்டணியில் இருக்க வேண்டி உள்ளதால் திருமாவளவன் அப்படி பேசி இருக்கிறார். அதனால் திருமாவளவன் சொன்னதையும் நாங்கள் பொறுத்துப் போக வேண்டி உள்ளது.
ஏன் துணை முதலமைச்சர் ஆக ஒரு ஆதித் தமிழ் குடியைச் சேர்ந்தவரை நியமிக்க முடியாதா? கல்வி அமைச்சராக ஆதிதிராவிடரை நியமித்தால் படிப்பு ஏறாதா? ஆதிதிராவிடர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறையை தவிர வேறு எந்த துறையை கொடுத்துள்ளனர்? உங்க வீட்டுக்குள் இருந்துதான் துணை முதல்வர் வர வேண்டுமா? நாட்டுக்குள்ளே இருந்து வேறு யாரும் வந்தால் நாடு நாசமாகி விடுமா என பேசியுள்ளார்.
மேலும், ஒரு தடவை நாம் தமிழருக்கு வாய்ப்பு கொடுங்கள். நாங்கள் என்ன செய்கிறோம் என்று பாருங்கள். ஆதிதமிழ் குடிகளை மதிப்பதற்குப் பதிலாக மிதிக்கும் கொடுமை இப்போது நடந்து வருகிறது. இதை சட்டம், திட்டத்தால் மாற்ற முடியாது. உளவியல் ரீதியாக மாற வேண்டும்,” என பேசினார்.