சேட்டை தான..திருச்சி வந்தவருக்கு தூத்துக்குடி வர முடியாதா..? சீமான் ஆவேசம்
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் குற்றம்சாட்டியுள்ளார்.
கவர்மெண்டா..? கந்துவட்டியா..?
இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் மத்திய அரசை கண்டித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அவர் பேசியது வருமாறு, “கவர்மெண்ட் நடத்துறியா? இல்லை கந்துவட்டி நடத்துறியா? என் வரியை மாதா மாதம் உனக்கு தருகிறேன் என்றால் உனக்கு வேலை என்ன? என்று வினவி, என் வரியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டு, அதை வாங்குவதற்கு நாங்கள் கெஞ்ச வேண்டுமா? என ஆவேசமாக வினவினார்.
அது என்ன உங்க காசா? என்றும் மாநிலங்களின் வருவாய் தானே மத்திய அரசுக்கு வருகிறது என்றும் மத்திய அரசு எதை வைத்து வருவாயைப் பெருக்குகிறது? என்று கேள்வியை முன்வைத்த அவர், சேட்டை தானே இதெல்லாம் என்று கூறி, எங்கள் பணத்தை வாங்கிக்கொண்டு பேரிடர் காலத்தில் நாங்கள் பிச்சை எடுக்க வேண்டுமா? என்றார்.
தூத்துக்குடிக்கு வர முடியாதா..?
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசுக்கென்று தனி வருவாய் கிடையாது என சுட்டிக்காட்டி, வரியாகப் பெற்றதை விட கூடுதலாக நிதி கொடுத்திருப்பதாகக் கூறும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியை யாரிடம் எப்போது கொடுத்தார்? என்று கேட்டார்.
அப்போ, இந்தி பேசும் மக்கள் மட்டும்தான் இந்தியாயா? எதற்கு எங்களை வைத்திருக்கிறீர்கள்? வரிக்காகவும் நிலத்தின் வளத்திற்காகவும் மட்டும் தானே என்ற சீமான், திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்துவைக்க வர முடிந்த பிரதமர் மோடியால், வெள்ளத்தில் மிதந்த தூத்துக்குடிக்கு வர முடியவில்லை என்று சரமாரி கேள்விகளை எழுப்பினார்.