விஜய் பற்றி பேச அவசியம் இல்லை..அது உதயநிதியாக கூட இருக்கலாம் - சீமான் பதிலடி!
நடிகர்களுக்கு அரசியல் அறிவு கிடையாது என்று அமைச்சர் அன்பரசன் கூறியது குறித்து சீமான் பேசியுள்ளார்.
சீமான் பதிலடி
சி.பா.ஆதித்தானரின் மூத்த மகனான மறைந்த ராமச்சந்திரா ஆதித்தனாரின் 90ஆவது பிறந்த நாளையோட்டி சென்னையில் உள்ள அவரின் உருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது நடிகர்களுக்கு அரசியல் அறிவு கிடையாது என்று அமைச்சர் அன்பரசன் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், "விஜய் பற்றித் தான் அவர் சொல்லிருக்க வேண்டும் என அவசியம் கிடையாது. உதயநிதியும் நடிகர் தான். உதயநிதி பற்றிக் கூடச் சொல்லி இருக்கலாம்.
அப்படி அரசியல்வாதிகளுக்கு அறிவு இல்லை என்றால் சரத்குமார், குஷ்பு, நெப்போலியன் உள்ளிட்டோரை ஏன் கட்சியில் சேர்த்துக் கொண்டார்கள். அறிவாலயத்திற்கு வந்தால் அறிவு வந்து விடுமோ? திமுகவை அழிக்க இதுவரை ஒருவர் கூட பிறக்கவில்லை என்று சொல்லி வருகிறார்கள்.
அவசியம் இல்லை..
பிறகு ஏன் பிறக்காத எதிரிகளைக் கண்டு கூட அச்சப்படுகிறார்கள். அதிகாரத்தில் இல்லாத சமயத்தில் இவர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அது குறித்து எதுவும் பேசுவது இல்லை. ஏனென்றால் இவர்கள் சொன்னது எதையும் செய்யவில்லை.
எப்போது இவர்கள் வாக்குக்குக் காசு கொடுத்தார்களோ.. அப்போதே கொள்கை கோட்பாட்டு செத்துவிட்டது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா பேசும் கூட்டங்களில் கூட காசு கொடுத்தே கூட்டத்தைக் கூட்டினார்கள். எனக்கு வந்த 36 லட்சம் வாக்குகளில் 25 லட்சம் வாக்குகள் திமுகவில் இருந்து வந்தது.
திமுகவில் இருந்த பிள்ளைகள் இப்போது என்னுடன் இருக்கிறார்கள். இப்போது தமிழ் புதல்வன் திட்டம் என்று சொல்லி இளைஞர்களை வாக்களிக்க வைக்க ஆண்டுக்கு ரூ. 18,000 லஞ்சம் தருகிறார்கள்.. இதெல்லாம் ஒரு திட்டமா?" எனக் கேள்வி எழுப்பினார்.