தமிழ் தேசியத்தின் எதிரி யார்? சீமான் கொடுத்த விளக்கம்
தமிழ் தேசியத்தின் எதிரி யார் என்ற கேள்விக்கு சீமான் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் தேசிய எதிரி
தமிழ் தேசிய அமைப்புகள் சில தமிழ் தேசியத்தின் உண்மையான எதிரி யார் என மக்களுக்கு சொல்லாமல், திமுக மற்றும் கருணாநிதி என சொல்லும் அளவிலே உள்ளார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
சீமான் விளக்கம்
இதற்கு பதிலளித்த சீமான், "இந்தியமும், திராவிடமும் தான் தமிழ், தமிழர்கள், தமிழ் தேசியத்திற்கு எதிராக உள்ளது. தமிழ் தேசியம் பேசும் போது, கடுமையாக எதிர்ப்பவர்கள் தானே தமிழ் தேசியத்தின் எதிரி.
இப்போது நான் பேசுவதை 2006 ஆம் ஆண்டிற்கு முன்னர் பேசியது யார்? எங்கள் அண்ணன் தான். அன்று அவரின் பின்னால் நான் கைகட்டி நின்று கொண்டிருந்தேன்.
பெரியார் அண்ணா வழியில் வந்த இவர்கள் செய்யாததை, ஜெயலலிதா செய்தார். பெரம்பலூர் தொகுதியில், திமுக சார்பில் ஆ.ராஜா நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.
பெரம்பலூர் பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டதும், ஆ.ராஜாவை தனிதொகுதி நீலகிரிக்கு மாற்றினார்கள். ஆனால் ஜெயலலிதா பட்டியலினத்தை சேர்ந்த தனபாலை சபாநாயகர் ஆக்கினார்.
ஆரியமும் திராவிடமும் ஒன்று
திமுகவிடம் ஒரு பொதுத்தொகுதியை பெற எங்கள் அண்ணன் என்ன பாடுபடவேண்டியுள்ளது. பொதுகுளத்தில் குளிக்ககூடாது என்பது போல் பொதுத்தொகுதிக்கு ஆசைப்படாதே என அவர்கள் கூறியதாக இவர்களே பதிவு செய்துள்ளார்கள்.
ஆரியம், திராவிடம் ரெண்டும் ஒன்று தான். ஒரு நாள் கட்டிப்பிடித்து கைகுலுக்கி சங்கமிப்பார்கள் என முத்துராமலிங்க தேவர் எங்களுக்கு கற்பித்துள்ளார். எதிரி என தெரியாமலா இத்தனை ஆண்டுகாலம் உறுதியாக நின்று சண்டை செய்கிறோம்" என பேசினார்.