கலைஞர் எதிர்ப்பு என்ற தொற்றுநோய் எனக்கும் இருந்தது - திருமாவளவன்
கலைஞர் எதிர்ப்பு என்ற தொற்றுநோய் எனக்கும் இருந்தது என திருமாவளவன் பேசியுள்ளார்.
திருமாவளவன்
"மக்களை சந்திப்போம் தமிழகத்தை காப்போம்" என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவின் கூட்டணி கட்சிகளை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.
இந்நிலையில், திமுக கூட்டணியை சேர்ந்த விசிக தலைவர் திருமாவளவனும், அதிமுக தலைவர்களை விமர்சிக்க தொடங்கியுள்ளார்.
முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவு தின பொதுக்கூட்டம் அம்பத்தூரில் திமுக சார்பில் நடைபெற்றது.
இதில், கலந்து கொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், " தமிழ் தேசியம் பேசுகிற அமைப்புகள், தமிழ் தேசியத்தின் உண்மையான எதிரி யார் என மக்களுக்கு சொல்லாமல், திமுகவும் கருணாநிதியும் தான் என்று சொல்லக்கூடிய அளவிலே இருக்கிறார்கள்.
கலைஞர் எதிர்ப்பு என்ற தொற்றுநோய்
ஜெயலலிதாவையோ, எம்ஜிஆர்யோ விமர்சிப்பதில்லை. ஆனால் கருணாநிதி மட்டும் குறிவைக்கப்படுவது ஏன்? திராவிட இயக்கத்திற்குள் ஒரு பார்ப்பன பெண் உருவாக காரணமாக இருந்தவர் எம்ஜிஆர்.
ஆனால் அவரால் ஒரு நல்லது நடந்தது என்றால், தேசிய கட்சிகளால் தமிழ்நாட்டில் கால் பதிக்க முடியாமல் போனது. 50 ஆண்டுகளாக திமுக அதிமுக என்றே தமிழக அரசியல் உள்ளது. இங்கு காங்கிரஸ் வலிமை பெற்றிருந்தால், அதற்கு எதிராக பாஜக தமிழ்நாட்டில் கலூன்றி இருக்கும்.
தமிழ்நாடு முழுவதும் இருந்த கலைஞர் எதிர்ப்பு என்ற தொற்றுநோய் எனக்கும் இருந்தது. ஆனால் கலைஞரின் ஆற்றல் மற்றும் ஆளுமை குறித்து யாரும் தற்போது பேசுவது இல்லை" என பேசியுள்ளார்.