'தமிழிலும்' குடமுழுக்கு நடத்தப்படும்; அதென்ன பிச்சையா? சீமான் காட்டம்
'தமிழிலும்' குடமுழுக்கு நடத்தப்படும் என்று கூறுவது வெட்கக்கேடானது என சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழிலும் குடமுழுக்கு
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற ஜூலை மாதம் 7ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.
அதில் காலை 7.00 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கும்பாபிஷேக நிகழ்வில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 'தமிழிலும்' குடமுழுக்கு நடத்தப்படும் என்று கூறுவது வெட்கக்கேடானது.
சீமான் வலியுறுத்தல்
குடமுழுக்கு முழுமையாக தமிழில் நடத்தப்பட வேண்டும். தாய்த்தமிழில் குடமுழுக்கு என்பது திமுக அரசு வேண்டா வெறுப்பாக இடும் பிச்சையோ, சலுகையோ அல்ல; திருச்செந்தூர் ஒன்றும் ஆந்திராவிலோ, கர்நாடாகவிலோ, கேரளாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ இல்லை.
நாங்கள் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலிலோ, சபரிமலை ஐயப்பன் கோவிலிலோ, மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலிலோ தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று கேட்கவில்லை. குறைந்தபட்சம் சம்ஸ்கிருத்திற்கு இணையாக சரிபாதி வேள்விச்சாலைகள் அன்னைத்தமிழுக்கு வழங்கப்பட வேண்டும்.
கோபுர கலசங்கள் நன்னீராட்டின்போது கோபுர உச்சியிலும் தமிழ் மந்திரங்கள் ஒலிக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாகும். அதனை விடுத்து, தமிழ் ஓதுவார்களை ஓரமாக நிற்க வைத்து முற்றோதல் செய்துவிட்டு, அதனை தமிழில் குடமுழுக்கு நடத்தியதாக ஏமாற்றும் திமுக அரசின் வழக்கமான ஏமாற்று அறிவிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது.
தாய்த்தமிழ் கோபுர கலசம் ஏற வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான கோரிக்கை! அதனை நிறைவேற்றும் வகையில், தமிழ் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமானுக்கு குடமுழுக்கு நன்னீராட்டின் போதும், வேள்விச்சாலையிலும் தமிழ் மந்திரங்கள் ஓதி தமிழில் குடமுழுக்கு நடந்திட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
இல்லையென்றால் திட்டமிட்டபடி நாம் தமிழர் கட்சி அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.