நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்டை ஒழித்துவிடுவோம் என்று சொன்னவர்கள் இன்றைக்கு.. சீமான் காட்டம்!
+2வில் நல்ல மதிப்பெண்களை எடுத்தும் நீட் தேர்வு முறையால் மருத்துவராக முடியாத மாணவி அனிதா,கடந்த 2017 ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சீமான்
நீட்டை ஒழிக்கும் இரகசியம் எங்களுக்கு நன்றாகத் தெரியும்’ என்று சொன்னவர்கள் இன்றைக்குகார் பந்தயம் நடத்துவதில் மும்முரமாகிவிட்டதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
தகுதி இருந்தும் தான் விரும்பிய கல்வியைக் கற்க முடியவில்லையே என்ற துயர்மிகுச்சூழலில், தன்னைப்போன்ற கையறு நிலை வேறு எந்தப் பிள்ளைக்கும் வந்து விடக்கூடாது என்று அன்புத்தங்கை அனிதா தன் இன்னுயிரை ஈந்து இனத்தின் வலியை உலகிற்கு உணர்த்தினாள்! 'தீக்குச்சி இல்லாமல் தீபங்கள் இல்லைதான்!’
ஆனால் ஒவ்வொரு முறையும் யார் தீக்குச்சியாக்கப்படுகிறார்கள்? என்பதுதான் கேள்வி; அப்படி ஒரு தீக்குச்சியாகி கல்வி உரிமை மீட்புக்கான புரட்சித்தீயைத் தமிழ் மண்ணில் பற்ற வைத்த மானமறத்தி அன்புத்தங்கை அனிதா!
நீட்டை ஒழிக்கும் இரகசியம்
அந்த எளிய மகள் ஏற்படுத்திய தாக்கம்தமிழ்நாட்டில் பேரதிர்வை உண்டாக்கிய போதிலும், அவரைத்தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட தமிழ்ப்பிள்ளைகள் தங்கள் இன்னுயிரை இழந்துவிட்ட போதிலும், இன்றுவரை நீட் தேர்வினை இம்மண்ணை விட்டு அகற்றமுடியவில்லை என்பதுதான் சமகால வரலாற்று பெருங்கொடுமை!
அனிதா வீட்டிற்கே சென்று ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம், நீட்டை ஒழிக்கும் இரகசியம் எங்களுக்கு நன்றாகத் தெரியும்’ என்று சொன்னவர்கள் இன்றைக்குகார் பந்தயம் நடத்துவதில் மும்முரமாகிவிட்டனர். இந்திய ஒன்றிய அரசுடன் ஒன்றிணைந்து காசு வெளியிடும் இரகசியம் தெரிந்தவர்கள்,
நீட் தேர்வை ரத்து செய்யும் இரகசியத்தை எப்போது வெளியிடுவார்கள் என்பதுதான் நம்முடைய நீண்டநாள் கேள்வியாக இருக்கிறது.
அன்புத்தங்கை அனிதாவின் ஈகத்தைப் போற்றுகின்ற இந்நாளில், அவருடைய உடன் பிறந்தாராகிய நாம் தொடர்ச்சியாகப் போராடி, அவர் கண்ட பெருங்கனவை நிறைவேற்றுகின்ற உறுதியை ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.