நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் விலைவாசி உயர்வு குறையும்; நானே வேளாண்மை செய்வேன் - சீமான் பேச்சு!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.
கலந்தாய்வு கூட்டம்
மாவட்ட கட்டமைப்பை வலிமைப்படுத்துதல் ௩ஆம் கட்ட பயணத்திட்டமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருத்தணி,மதுரவாயல்,பூந்தமல்லி,திருவள்ளூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சீமான் பேட்டி
அப்போது அவர் பேசியதாவது "இன்னும் ஐந்து வருடம் கழித்து 200 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயம் 2000 ரூபாய்க்கு விற்கப்படும். விளைபொருட்களை உற்பத்தி செய்யும் வேளாண்மையில் அரசு எந்த கவனமும் செலுத்தவில்லை. தமிழகத்தில் நிலவளம் இருக்கிறது உழைக்கிற ஆற்றல் இருக்கிறது அதை விட்டுவிட்டு வேறு மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்வது கேவலம்.
உலகத்திற்கு வேளாண்மையைக் கற்றுக்கொடுத்த இனம் வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்கிறது. எல்லாம் வளமும் இருக்கின்ற இந்த நிலப்பரப்பில் உழைக்கிற ஆற்றல் உள்ள இளைஞர்களும் இருக்கிறார்கள் அதை நோக்கி இந்த நாடு நகரவே இல்லை. அத்தியாவசிய,அடிப்படை உயிர்த்தேவை உணவு. அதற்கு இந்த நாட்டில் எந்த திட்டமும் இல்லை.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்கும்படி திட்டம் கொண்டுவர வேண்டும். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் விலைவாசி உயர்வு குறையும். நானே வேளாண்மை செய்வேன், அரசே செய்யும். நிர்ணயிக்கப்பட்ட ஒரே விலையில் நாடெங்கும் நெய்தல் அங்காடி, குறிஞ்சி அங்காடி, மருதம் அங்காடி வைத்து எல்லாப் பொருட்களும் மக்களுக்கு எளிதாக அவர்களில் வாழ்விடத்தில் கிடைக்கும்படி நாங்களே விநியோகம் செய்வோம் என்று சீமான் பேசியுள்ளார்.