நான் பாடுகிறேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் - சீமான் ஆவேசம்
நானும் பாட்டு பாடுகிறேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என சீமான் பேசியுள்ளார்.
சாட்டை துரைமுருகன்
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா போட்டியிட்டுள்ளார். அவரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதற்காக இன்று காலை குற்றாலத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோனின் பிறந்தநாளுக்கு சென்னையில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதன் பின் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். இதில் பேசிய சீமான், தமிழ்நாட்டில் 31 நாட்களில் 131 கொலை நிகழ்ந்துள்ளது. தம்பி ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னரே இது தெரிய வந்துள்ளது.
சீமான்
மரக்காணம், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து எத்தனை பேர் மரணம்? இதற்கு பிறகும் விக்கிரவாண்டியில் நேற்று கள்ளச்சாராயம் குடித்து எத்தனை பேர் பாதிப்பு? புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு எப்படி சாராயம் வருது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதியை எங்கே அவதூறு செய்து பேசினார்? துரைமுருகன் என்னை விடவா பேசி விட்டார். நீங்கள் என்னை ஏன் கைது செய்யவில்லை. என்னை சுற்றி உள்ளவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்க பார்க்கின்றனர். ஏற்கனவே இருந்த பாட்டை தான் அவர் பாடினார்.
எழுதினவன், பாடினவனை விட்டுவிட்டு அந்த பாட்டை எடுத்து பாடியவரை ஏன் கைது செய்றீங்க? நானும் அதே பாட்டை இதோ பாடுகிறேன். என்னை கைது செய் பார்ப்போமே. கருணாநிதி தமிழ் இன துரோகி. ஆட்சிக்கு வந்ததும் கருணாநிதியை புனிதராக்க பார்க்கின்றனர். என பேசியுள்ளார்.