உளச்சான்று உறுத்தவில்லையா முதல்வரே?...முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சீமான் சரமாரி கேள்வி..!

Naam tamilar kachchi M K Stalin DMK Seeman
By Thahir Jul 02, 2022 09:56 AM GMT
Report

மனசாட்சி உறுத்தலையா முதல்வரே? என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான் சரமாரி கேள்வி

இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சனநாயகத்தால் நிறுவப்படும் ஓர் அரசை நாட்டின் குடிகள்தான், மதிப்பிட வேண்டும். ஆட்சி முறைமைகளில் நன்மைகள் நிகழ்ந்தால் அவர்களாகத்தான் போற்றிக் கொண்டாட வேண்டும். ஆனால் இங்கோ,

‘நூறாண்டு போற்றும் ஓராண்டு சாதனை’ என ஆட்சியாளர்களே அரசுப் பணத்தில் விளம்பரம் செய்துச் சுயதம்பட்டம் அடிக்கும் கேலிக்கூத்துகளும், ‘நல்லாட்சியின் நாயகன்’ எனத் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொள்ளும் நாடகங்களும் நாள்தோறும் அரங்கேறுகின்றன.

உளச்சான்று உறுத்தவில்லையா முதல்வரே?...முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சீமான் சரமாரி கேள்வி..! | Seeman Barrages Questions To Cm M K Stalin

தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றிடாத ஆட்சியாளர் பெருந்தகைகள், நாட்டையே மாற்றிப் படைத்து, நல்லாட்சி தந்து கொண்டிருப்பதாகக் கூறுவது வெட்கக்கேடானது!

தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டதாக தற்பெருமையோடு கூறுகிறார் மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள்! எப்போது, எங்கே நிறைவேற்றினீர்கள் முதல்வரே? அவற்றை எல்லாம் மக்கள் அறிவார்களா?

நீட் தேர்வுக்கான விலக்கு மாநில அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என அறிந்திருந்தும், புதிய சூத்திரம் வைத்திருக்கிறோம்; ரகசியத்திட்டம் வைத்திருக்கிறோம்; அவற்றால், நீட் தேர்வுக்கான விலக்கைப் பெறுவோம் என மேடைதோறும் முழங்கினீர்கள்.

உங்கள் ஆட்சியில் இதோ இரண்டாவது நீட் தேர்வும் வந்துவிட்டது. என்ன ஆயிற்று அந்த சூத்திரம், இரகசியமெல்லாம்? அவையும் மறந்துபோனதா? முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தீர்மானம் இயற்றி, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம் எனத் தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, தீர்மானம் இயற்றவே மூன்று மாதங்கள் காலங்கடத்தினீர்கள்.

நீட் தேர்வு அச்சத்தால் அடுத்தடுத்து மாணவப்பிஞ்சுகள் கருகி வரும்போதும் கள்ளமௌனம் சாதிப்பதுதான் நீங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய இலட்சணமா?

ஏழு தமிழர் விடுதலையைச் சாத்தியப்படுத்துவோம் என்றீர்கள்! தம்பி பேரறிவாளன் தானாகச் சட்டப்போராட்டம் நடத்திப் பெற்ற விடுதலைத் தீர்ப்பு, ஆறுபேர் விடுதலைக்கான திறவுகோலாகக் கிடைத்தும், அதனைக்கொண்டு, ஆளுநருக்கு அழுத்தம் தந்து விடுதலையைச் சாத்தியப்படுத்தாமல் நிற்பதேன்? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய இலட்சணமா?

சமூக நீதியின் அடிப்படையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் தரப்படும் என்றீர்கள். இப்போது அதற்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், நிதிநிலை சரியான பிறகு கொடுப்போம் என்றும் சாக்கு போக்குச் சொல்கிறீர்கள். இதுதான் கொடுத்த வாக்கை நீங்கள் நிறைவேற்றிய இலட்சணமா?

பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், பெட்ரோலுக்கு 3 ரூபாய் மட்டும் விலையைக் குறைத்துவிட்டு, அத்தியாவசியப் பொருட்களைச் சுமந்து செல்லும் கனரக வாகனங்களுக்கான டீசல் விலையில் அதுகூடக் குறைக்காமல் விட்டீர்கள். இதுதான் கொடுத்த வாக்கை நீங்கள் நிறைவேற்றிய இலட்சணமா?

எரிவாயு உருளைக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என அறிவித்தீர்கள். இன்றோ அதுகுறித்தான பேச்சே எழவில்லை. இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய இலட்சணமா?  என கேள்வி எழுப்பியுள்ளார்.

மானத்தை பற்றி கவலைப்படாத மனிதர்களின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!