இவர்களை ஒழித்தால் தான் இனத்திற்கு விடுதலை - பொதுகுழுக்கூட்டத்தில் சீமான் ஆவேசம்..!
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சீமான் சிறப்புரை
இதில்,கலந்து கொண்டு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாம் பசித்திருக்க வேண்டும் என கூறி, நம்மை விமர்சிப்பவர்களை குறித்து பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
வரும் 2024, 26 ஆண்டு தேர்தல் நமக்கு மட்டுமன்றி, தமிழ் தேசியத்திற்கும் மிகவும் முக்கியமான தேர்தல் என கூறிய சீமான் நேர்மறை கருத்துக்களை வளர்த்து கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார்.
வென்றிடமாட்டோமா?
கூட்டணி இல்லாமல் எப்படி வெல்வோம் என்பதை இன்னும் 2 ஆண்டுகளில் காட்டுவோம் என உறுதிபட தெரிவித்த அவர், மக்கள் நாம் தமிழர் தான் ஆளவேண்டும் என்பதை முடிவெடுத்துவிட்டதாக தெரிவித்தார்.
பரந்தூர், சிப்காட் நிலத்தை எடுத்தி விடுவார்கள் என்று ஒருபோதும் கருதவேண்டாம் என்ற சீமான், நான் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது என்று கூறினார்.
ஓராண்டு காலம் நான் சிறையில் தவித்த போது எனக்குள் உருவான வெறி இவர்களை ஒழிக்கும் வரை நான் ஓயமாட்டேன் என ஆவேசமாக கருத்து தெரிவித்த அவர், 10 பேர் மட்டுமே உள்ளே சென்றாலும் பாராளுமன்றத்தை கதறவிடாமல் விடமாட்டோம் என அதிரடியாக தெரிவித்தார்.
அயோக்கியர்களை, கொலை - கொள்ளை செய்தவர்கள் எல்லாம் வெல்லும் போது, நாம் வென்றிடமாட்டோமா? என பேசிய சீமான், இனத்தின் விடுதலை ஒன்றே முடிவு என ஆவேசமாக பேசி விடைபெற்றார்.