திருமாவளவனும், சீமானும் பிரிவினைவாத தீய சக்திகள் - கொந்தளித்த ஹெச்.ராஜா
பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, திருமாவளவன், சீமானை தீய சக்திகள் என விமர்சித்துள்ளார்.
ஹெச்.ராஜா
தேனி, வீரபாண்டியில் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அதில், “நவம்பர் 6ஆம் தேதியன்று நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியும், தமிழக காவல்துறை தந்திரமாக செயல்பட்டு ஒரு சில இடங்களுக்கு அனுமதி மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
இது காவல்துறையின் ஈரல் அழுகி போயுள்ளது என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதை நினைவு படுத்துவதாக இருக்கிறது. பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து திருமாவளவன், யாசின் மாலிக்-ன் கைக்கூலி சீமான் போன்றோர் நடத்திய மனித சங்கிலிக்கு அரசு உளவுத்துறை அனுமதியை பெறவில்லை.
தீய சக்திகள்
தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக மனித சங்கிலி நடத்திய திருமாவளவன், சீமான் இருவரும் பிரிவினைவாதிகள், தீய சக்திகள் எனத் தெரிவித்தார். மேலும், தொடர்ந்து தமிழக ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று திமுகவினர் கூறி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
“கவர்னர் யார் வீட்டு சர்வன்ட்? கவர்னரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. அவரை திரும்ப அனுப்ப வேண்டும் என்று சொல்வதெல்லாம் கோமாளித்தனம். அதற்கு அதிகாரமும் கிடையாது. இது குறித்து திருமாவளவன் போன்ற சில்வண்டு கட்சிகள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அவர் ஒரு தீய சக்தி, பிரிவினைவாதி.
சில்வண்டு கட்சிகள்
அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால் திமுகவில் உள்ளவர்கள் கவர்னரை மாற்ற கூறுவது 100 சதவீத அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே கவர்னரை மாற்ற சொல்வது தவறானது. இதனை நிறுத்திக் கொள்வது திமுகவினருக்கு நல்லதாகும். வருகின்ற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தான் முதன்மையானது.
கருத்துக்கணிப்புகளையும் தாண்டி அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என கூறினார்.