ஜனாதிபதியே கோவிலுக்குள் செல்ல முடியாத நாட்டில் பொது சிவில் சட்டம் வந்து என்ன பயன்? - விளாசிய சீமான்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது சிவில் சட்டம் குறித்து பேசியுள்ளார்.
சீமான்
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பொது சிவில் சட்டம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "இப்போது இருக்கும் சட்டங்களினால் நாட்டுக்கு என்ன பிரச்சினை இருக்கு? இஸ்லாமிய, கிறிஸ்தவர்களின் சட்டமுறையை தடுக்கணும் என்பதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது.
என் உடையும், என் உணவும் உங்களுடன் ஒன்றாக இல்லாத போது எல்லோருக்கும் பொதுவான சட்டம் எப்படி இருக்க முடியும்? ராணுவத்தில் அனைவருக்கும் ஒரு வரைமுறை உள்ள நிலையில் சீக்கியர்களுக்கு என தனிவிதி உள்ளதே? அந்த விதியை மாற்றிவிட்டு அப்புறம் வாருங்கள், பொது சிவில் சட்டம் குறித்து பேசலாம்" என்று கூறினார்.
பேட்டி
இதனை தொடர்ந்து அவர் பேசுகையில், "ஒரே மயானம், ஒரே குளம் என ஏற்படுத்த முடியாத நாட்டில் சட்டம் மட்டும் எப்படி பொதுவானதாக இருக்க முடியும்? நாட்டின் முதல் குடிமகன் ராம்நாத் கோவிந்த் மரத்தடியில் அமர்ந்து யாகம் நடத்தி சென்றுள்ளார்.
நாட்டின் முதல் குடிமகள் திரவுபதி முர்மு கோயிலுக்கு உள்ளே போக முடியவில்லை. கட்டையைப் போட்டு தடுத்து வைத்தனர். நாட்டின் குடியரசு தலைவியே கோயிலுக்குள் செல்ல முடியாத நிலையில் பொது சிவில் சட்டத்தால் என்ன பயன் நேரப்போகிறது?" என்று பேசியுள்ளார்.