அதிமுகவுடன் கூட்டணி? எடப்பாடி பழனிச்சாமி என்னை அழைத்தார் - சீமான் பேட்டி!
சீமானை, எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு அழைத்ததாக கூறியுள்ளார்.
சீமான் பேட்டி
சேலம் மாவட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கூட்டணி வைத்திருப்பது நான் தான். தமிழ்நாட்டின் 8 கோடி மக்களுடன் சேர்ந்து கூட்டணி வைத்துள்ளேன். ஒரு தலைவன் என்பவன் மக்களை முழுமையாக நம்பனும்; நேசிக்கனும். என் மக்களை முழுமையாக நம்புகிறேன்-நேசிக்கிறேன்.
அதனால் நாங்கள் தேர்தலில் தனித்துதான் போட்டியிடுகிறோம். நாம் தமிழர் கட்சி வளர்ந்து 15%, 20% வாக்குகளைப் பெறும் போது விசிக, பாமகவை உள்ளடக்கிய கூட்டணி என்பது சாத்தியமாகலாம்.
இப்போதைக்கு பேசி பயனில்லை. திருமாவளவன், திமுகவைவிட்டு வரமாட்டார். அன்புமணி ராமதாஸ் என்ன முடிவெடுப்பார் என சொல்லவும் முடியாது" என்று கூறினார்.
கூட்டணி
இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், "அதிமுகவுடனான கூட்டணி குறித்து என்னை எடப்பாடி பழனிசாமி அழைத்து பேசினார். அப்போது, கூட்டணிக்கு நான் வர முடியாது. என் கொள்கை முடிவு இதுதான் என எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லிவிட்டேன்.
அது அவருக்கும் புரிந்திருக்கும். 2024 லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். 20 ஆண்கள்; 20 பெண்கள் என வேட்பாளர்களை அறிவிக்க உள்ளோம்" என்று கூறியுள்ளார்.