காவிரிப் படுகையில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எரிகாற்று எடுக்க தமிழக அரசு அனுமதியளிக்க கூடாது - சீமான்..!

Government of Tamil Nadu Seeman
By Thahir Aug 04, 2022 05:27 AM GMT
Report

காவிரிப் படுகையில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எரிகாற்று எடுக்க தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் அனுமதியளிக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசுக்கு சீமான் வேண்டுகோள்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதில், திருவாரூர் மாவட்டம் பெரியகுடியிலுள்ள ஹைட்ரோ கார்பன் கிணற்றிலிருந்து எரிகாற்று எடுப்பதற்கான கலந்தாலோசனை கூட்டம் விரைவில் நடைபெறுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

Seeman

'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான' காவிரிப்படுகை பகுதியில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எரிகாற்று எடுக்க முயலும் திமுக அரசின் திரைமறைவுச் செயல்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியது.

காவிரிப் படுகை மாவட்டங்களை முழுதாகப் பாலைவனமாக்கி, விவசாயிகளை வேளாண்மையை விட்டே அகற்றும் நோக்கத்துடன் கடந்த 2010-ஆம் ஆண்டு அன்றைய திமுக அரசால் அனுமதியளிக்கப்பட்டுத் தொடங்கப்பட்ட மீத்தேன் எடுக்கும் கொடுந்திட்டம், ஐயா நம்மாழ்வார் உள்ளிட்ட பெருமக்களின் தொடர்ப் போராட்டத்தால் கைவிடப்பட்டது.

மேலும், நாம் தமிழர் கட்சி மற்றும் விவசாயச் சங்கங்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாகவும், வேளாண் பெருங்குடி மக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்றும் கடந்த 2020-ஆம் ஆண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரிப் படுகை மாவட்டங்களைப் 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக' அன்றைய அதிமுக அரசு அறிவித்தது.

இதனால் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் எரிகாற்று உள்ளிட்ட நாசகார திட்டங்களால் பாதிக்கப்படவிருந்த இலட்சக்கணக்கான ஏக்கர் வேளாண் நிலங்கள் பேரழிவிலிருந்து தப்பியது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் வேளாண் நிலங்களைப் பாழ்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டு, மக்களின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்ட சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை, திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 'பசுமை வழிச்சாலை' என்ற மாற்றுப் பெயரில் மீண்டும் செயல்படுத்த முனைந்ததைப்போல, ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் திமுக அரசு மீண்டும் தொடங்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது .

மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தொடங்கினால் அது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்ட விதிகளுக்கு முற்றிலும் எதிரானது மட்டுமின்றி, காவிரிப் படுகை வேளாண் பெருங்குடி மக்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமுமாகும்.

எனவே, தமிழ்நாடு அரசு காவிரிப்படுகை மட்டுமின்றி தமிழ்நாட்டில் எந்த இடத்திலும், வேளாண் நிலங்களை அழிக்கும் யாதொரு எரிகாற்று எடுக்கும் திட்டத்திற்கும், எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாதென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

மேலும், பெருங்குடி ஹைட்ரோ கார்பன் கிணறு தொடர்பாக விவாதிக்க திருவாரூர் மாவட்ட ஆட்சியர் விடுத்த அழைப்புக் குறித்து தமிழ்நாடு அரசு மக்களுக்கு உரிய விளக்கமளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.