காவல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் - சீமான் உள்ளிட்ட 22 பேர் மீது வழக்குப்பதிவு!
சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சி தில்லை நகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீமான்
திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாகக் கருத்து பதிவிட்டதாக நா.த.க சீமான், சாட்டை துரை முருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட 22 பேர் மீது முல்லைநகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை இழிவுபடுத்திப் பேசியதாகச் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
வழக்குப் பதிவு
இதனைத் தொடர்ந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சீமான் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பெயரைக் குறிப்பிடாமல் ஒருமையில் ஜாதிய நோக்கத்துடன் அவர் செயல்படுவதாகப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் கொலை மிரட்டல் விடுத்தும், எச்சரிக்கை விடுத்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவரை திருச்சி தில்லை நகர் காவல்துறை கைது செய்தனர்.
மேலும் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சி தில்லை நகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. .