இனி பறக்கலாம்.. மிதக்கலாம்; முதல் கடல்வழி விமான சேவை - எங்கே தெரியுமா?
கேரளாவில் முதல் முறையாக கடல்வழி விமான சேவை தொடங்கப்படவுள்ளது.
கடல்வழி விமான சேவை
கேரளாவில் ஏராளமான சுற்றுலா பகுதிகள் உள்ளன. அண்டை மாநிலங்களை சேர்ந்த பலரும் அங்குதான் விடுமுறை நாட்களை கழிக்க விரும்புகின்றனர்.
எனவே அரசு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, அரசு மற்றும் மத்திய அரசு சார்பில் நீர்வழி விமான சேவை தொடங்கப்படவுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அரசு முடிவு
ஒரு நீர் நிலையில் இருந்து புறப்படும் விமானம் வானில் பறந்து மற்றொரு நீர்நிலையை சென்றடையும். கோவலம், அஸ்டமுதி, புன்னமாடா, குமரகோம், வெம்பநாடு, மலப்புழா, பேக்கல் ஆகிய பகுதிகளில் நீர்வழி விமான மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நீர்வழி விமானங்களில் 9 பேர் முதல் 30 பேர் வரை அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சராசரியாக 1000 அடி முதல் 1,500 அடி உயரம் வரை இந்த விமானங்கள் பறந்து செல்லும். பகல் நேரங்களில் மட்டுமே இந்த விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனமும், இந்திய விமான நிறுவமும் இணைந்து நீர்வழி விமான சேவையை நடத்துகின்றன. இதன் மூலம் கேரள சுற்றுலா துறைக்கு வருவாய் அதிகாிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.